விஜய் கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி
Share
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க. புதிதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார்.
தமிழக தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மரணம் அடைந்த பிறகு கூட்டணி அரசியல் தான் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யும் கூட்டணி அரசியலுக்கு தயாராக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித்து களம் காண விஜய் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. விஜய்யின் அரசியல் பயணம் தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மறைந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரது கொள்கைகளை பின்பற்றி அரசியல் களத்தில் நடைபோட உள்ள விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளையும் பயன்படுத்தியே அரசியல் மேற்கொண்டு வருகிறார். சமூக நீதிக் கொள்கைகள், இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ள விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். கல்வியை தமிழக பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இப்படி தமிழ் தமிழர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலை அவர் சந்திக்க இருக்கிறார். ஆன்லைன் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 48 லட்சம் பேர் இதுவரை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமான வகையில் பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்குள் 5 மண்டல மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள விஜய் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார். 100 தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார். 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தி்ல் உருவாக்குவதற்கும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.