LOADING

Type to search

இலங்கை அரசியல்

திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான பயிற்சி

Share

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான பயிற்சியானது ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனம், உலக மருத்துவ சுகாதார நிறுவனம் உதவியுடன், விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனம் நடாத்திய இப்பயிற்சியில், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 35 பேர் திறன்பலகையை கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறனான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனத்தின் திறன் பலகை வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் உள்ள திறன் பலகையினை அதிஉச்சமாக பயன்படுத்தி, நவீனத்துவமான கற்பித்தலை மாணவர்களுக்கு செயல்படுத்துவதற்கு உதவும் நோக்குடன் 10 பாடசாலைகளில் முன்மொழியப்பட்ட திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான முதல் பயிற்சியானது, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. 

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் திறன் பலகையை பயன்படுத்தல், தேடு பொறி பயன்பாடு, ஆவணங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்தல், எளிமையான தட்டச்சு பயன்பாடு, கற்றல் மாதிரிகளை உருவாக்கல், காணொளிகளை உருவாக்கல், வினாத்தாள்களை உருவாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்பாடு ஆகியவற்றில் செயல்பாட்டு வழிப் பயிற்சியாக இப்பயிற்சி நடைபெற்றது. 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபரின் ஒழுங்கமைப்பில், பங்கேற்ற அனைவருக்கும் தனித்தனி கணனியை இணைய வசதிகளுடன் பயன்படுத்தும் வசதிகள் முன்ஆயத்தத்தோடு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டது மிகச் சிறந்த முன்மாதிரி. பயிற்சி பெற்ற 35 ஆசிர்யர்களுக்கும், தொடர் பயிற்சிகள் வழங்கி, அவர்களை பயிற்றுனர்களாக உருமாற்றி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஏனைய ஆசிரயர்களையும் பயிற்றுவிக்கும் செயல்திட்டம் அதிபர் தலைமையில் முன்மொழியப்பட்டதும் சிறப்பம்சமாகும். இப்பயிற்சியானது, மிகுந்த பயனுடையதாக இருந்ததாகவும், மேலும் தமக்கு இவ்வாறான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் பயிலுனர்களால் வழங்கப்பட்ட பின்னூட்டலில் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் திரு.ந.சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், உலக மருத்துவ சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன், விசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.ந.தெய்வேந்திரராஜா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரு.கிருசாந்தன், திரு.சிவசெல்வன் மற்றும் திரு.செந்தூரன் ஆகியோர் வளவாளர்களாக பயிற்சியினை முன்னெடுத்திருந்தனர்.