விருதுகள் பல பெற்ற எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ‘குணா கவியழகன்’ அவர்களின் நூல் அறிமுக விழா ஸ்காபுறோவில் நடைபெற்றது
Share
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் இளம் வயதிலிருந்தே விடுதலைப் போராட்ட அரசியலில் பயணிப்பவரும். ஊடகப் பணிப்பாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான குணா கவியழகன்’ அவர்களின் நூல்களின் அறிமுக விழா ஸ்காபுறோவில் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அஜின்கோர்ட் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
தனது படைப்புக்களுக்காக விருதுகள் பல பெற்ற எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ‘குணா கவியழகன்’ அவர்களின் அழைப்பையும் தாய்வீடு பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பை ஏற்றும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் மண்டபத்தில் சபையோராக அமர்ந்திருந்தமை அழகுக் காட்சியாக விளங்கியது.
ஒலிபரப்பாளர் வேந்தன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த நூல்கள் அறிமுக விழாவில் பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன், எழுத்தாளர் மாதங்கி எழுத்தாளர் டொட்றிகோ மற்றும் எழுத்தாளரும் கவிஞருமான சித்திவிநாயகம் கியோர் ஒவ்வொரு நூல் பற்றியும் ஆய்வுரைகளையும் கருத்துரைகளையும் சிறப்பாக வழங்கினார்கள் சமூகம் சார்ந்த படைப்புக்கள் மற்றும் மக்களுக்கு அவசியமான இலக்கியம் , அரசியல், அத்துடன் எமது மொழி என காத்திரமான கருத்துக்கள் பகிரப்பட்ட ஒரு படைப்பிலக்கிய விழாவாக இந்த நிகழ்வு நகர்ந்து சென்றது என்றால் அது மிகையாகாது.
பதிலுரை ஆற்றிய எழுத்தாளர் ‘குணா கவியழகன்’ அவர்கள் தனது உரையை ஆரம்பிக்கும் போதே ஒரு சமூகத்தை நேசிக்கும் ஒரு படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திய வண்ணம் சபையோரை கவரும் வகையிலும் அத்துடன் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழரின் தலைவிதியை மீண்டும் நிமிரச் செய்யும் வகையில் எமது அனைத்து செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்ற கருத்தோடு தனது அழகியதும் சுருக்கமானதுமானதுமான உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து நூல்களின் பிரதிகள் அழைக்கப்பெற்ற பல்துறை சார்ந்த அன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து சபையோரின் கருத்துக்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றன. அதில் காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் அவர்களின் உரையை பார்வையாளர்கள் செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் சிலரின் கருத்துக்களும் சபையோருக்கு உற்சாகத்தை அளித்தன.
மொத்தத்தில் முழுமையான ஒரு படைப்புக்கள் சார்ந்த மக்கள் நிகழ்வாக அன்றைய அறிமுகவிழா மிளிர்ந்து என்பதும் உண்மையே!