LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் பொது வேட்பாளர் வெல்வாரா? வெல்ல மாட்டாரா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமா? அவர் வெல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது தமிழ் மக்களின் ஆகப்பிந்திய தோல்விகரமான ஒரு மக்கள் ஆணையாக வெளியில் காட்டப்படாதா? தமிழ் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்தும் கோரிக்கைகளை தோற்கடித்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதா? என்று ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளர் என்னிடம் கேட்டார்.

அவரிடம் நான் திரும்பி கேட்டேன்நீங்கள் ஓர் அரசியல்வாதி. உள்ளூராட்சி சபையில் அல்லது மாகாண சபையில் அல்லது நாடாளுமன்றத்தில் போட்டியிடும் பொழுது உங்களுக்கு அந்த சந்தேகம் வருவது இல்லையா? இந்த தேர்தலில் நான் வெல்வேனா? நான் கட்டிய கட்டுப்பனம் எனக்கு கிடைக்குமா? எனது குடும்பம் உறவினர்கள் நண்பர்களாவது எனக்கு வாக்களிப்பார்களா ? என்று நீங்கள் பயப்படுவது இல்லையா?”

அவர் சொன்னார்பயம் இருக்கும். ஆனால் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும். அதற்காக நான் உழைப்பேன். அதற்காக என்னால் முடிந்த அளவுக்கு நான் உழைப்பேன். என்னிடம் இருப்பவை அனைத்தையும் செலவழித்து நான் உழைப்பேன்என்று.

அவ்வாறான தேர்தல்களில் நீங்கள் அல்லது உங்களுக்கு வேண்டிய ஒருவர் போட்டியிடும் பொழுது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நிச்சயித்து உழைக்க முடிந்த உங்களால் ஏன் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரின் விடையத்தில் அவ்வாறு உழைக்க முடியாது? அதற்காக வேறு யாராவது உழைக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அது உங்களுடைய அரசியல் அல்லவென்று கருதுகிறீர்களா?” என்று கேட்டேன்.

அவர் சொன்னார்… “இது ஏனைய தேர்தல்களை போன்றது அல்ல. ஏனைய தேரதல்களில் கட்சி வாக்குகள் கிடைக்கும். வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, வாக்குகளைக் கொண்டு வரும். அது போன்ற பல காரணங்கள் அங்கே வாக்குத் திரட்ட உதவும். ஆனால் தமிழ் பொது வேட்பாளரின் விடையத்தில் எப்படி வாக்கைத் திரட்டுவது?” என்று கேட்டார்.

நான் திரும்பக் கேட்டேன்தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் பொது நிலைப்பாடு. தமிழ் பொது நிலைப்பாடு எனப்படுவது தமிழ் ஐக்கியம். தமிழ் ஐக்கியந்தான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் கொள்கைக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருதுகிறீர்களா? என்று. இந்த கேள்வியை அதன் நடைமுறை அர்த்தத்தில் மறுவளமாக கேட்கலாம். தமிழ் மக்களை வாக்காளர்களாக, ஆதரவாளர்களாக, பிரித்து வைத்திருப்பது யார்? கட்சிகள் தானே ?எனவே கட்சிகள் ஒன்றாக நின்று தமிழ் மக்களை ஒன்றாக வாருங்கள் என்று அழைத்தால் தமிழ் மக்கள் வராமலா விடப் போகிறார்?

இந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. பொது வேட்பாளர் வெல்ல மாட்டார் என்ற ஐயத்தையும் பொது வேட்பாளர் வெல்லாவிட்டால் அது பெரிய நாசமாக முடியும் என்ற அச்சத்தையும் அதிகமாக வெளிப்படுத்தும் பலரும் ஏதோ ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது அந்த கட்சியின் தீவிரமான செயற்பாட்டாளர்கள் தான். இந்தக் கேள்வி எங்கிருந்து வருகிறது?

எங்கிருந்து வருகிறது என்றால் தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகரமான வாக்குத் திரட்டும் பாரம்பரியத்திலிருந்து வருகிறது.

இதுவரை காலமும் வாக்குத் திரட்டிய பெரும்பாலானவர்கள் அந்த வாக்குகளை தங்களுக்காகத் திரட்டினார்கள்.அல்லது தங்கள் தங்கள் கட்சிகளுக்காக திரட்டினார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியின் விளைவுகள் அல்லது பலன்கள் ஆதாயங்கள் ஒரு தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ கிடைக்கும் என்று நம்பித்தான் உழைத்தார்கள். இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அங்கே ஒரு சுயநலம் இருந்தது. தனிப்பட்ட வேட்பாளரின் சுயநலம் அல்லது ஒரு கட்சியின் சுயநலம். அது கொள்கைக்கு வாக்குத் திரட்டுவதல்ல.

ஆனால் தமிழ் பொது வேட்பாளருக்குள் அது கிடையாது. ஏனென்றால் தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு பொது நிலைப்பாட்டை நோக்கி தமிழ் வாக்குகளைத் திரட்டுவது. ஒரு பொதுநலத்துக்காக வாக்கு திரட்டுவது. கொள்கைக்கு வாக்குத் திரட்டுவது. அது சுயநலத்தோடு வாக்குகளைத் திரட்டுவதில் இருந்து வேறானது. இதுதான் பிரச்சனை. இதுவரை காலமும் தன்னை மையப்படுத்தி அல்லது தனது கட்சியை மையப்படுத்தி வாக்குகளை திரட்டிய ஓர் அரசியல் போக்கில் இருந்து வேறுபட்டு செயல்பட வேண்டியிருப்பது என்பது.கொள்கைக்கு வாக்குத் திரட்டுவது.

தேசத்துக்காக; தமிழ் மக்களை ஒரு பெரிய மக்கள் கூட்டமாக கூட்டிக்கட்டுவது என்ற கொள்கைக்காக வாக்குகளைத் திரட்ட வேண்டி வரும்பொழுது சந்தேகம் ஏற்படுகிறது, நிச்சயமின்மைகள் கலந்த பயம் ஏற்படுகின்றது. ஏனென்றால் தேசத்துக்காக, ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்குத் திரட்டும் போக்கு எனப்படுவது இப்பொழுது குறைந்துவிட்டது. அதன் விளைவுதான் தமிழ் பொது வேட்பாளர் வெல்வாரா என்ற சந்தேகம்.

எல்லா தேர்தல்களிலும்,போட்டியிடும் வேட்பாளர்களைப் பொறுத்தவரை இந்த சந்தேகம் இருக்கும். தேர்தல்களில் மட்டுமல்ல,எந்தவோர் அரசியல் நடவடிக்கையிலும் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்பார்த்துத்தான் இறங்கலாம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இங்கு முக்கியம். தோற்றுப் போவோம் என்று பயந்து தன்னம்பிக்கை இழப்பது அரசியல் ஒழுக்கம் அல்ல.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக ஒரு கட்சி முக்கியஸ்தரோடு கதைத்தேன். அவர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு மிதவாத அரசியலுக்கு வந்தவர். அவர் என்னிடம் கேட்டார்இந்த விடயம் வெற்றி அளிக்குமா? அவ்வளவு தொகையான வாக்குகளைத் திரட்ட நம்மால் முடியுமா?” என்று.

அவரிடம் நான் திரும்ப கேட்டேன்முன்பு நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது ஒரு தாக்குதலுக்குச் செல்லும்போது இதில் நான் தோற்றுவிட்டால் என்று பயந்து பின்வாங்குவீர்களா? அல்லது வெற்றி நிச்சயம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த தாக்குதலுக்கு போவீர்களா ?”என்று. அவர் பதில் சொல்லவில்லை.

மிதவாத அரசியல் என்றாலும் சரி ஆயுதப் போராட்ட அரசியல் என்றாலும் சரி ரிஸ்க் எடுக்காமல் வெற்றிகள் இல்லை. வழமையான ஒரு போக்கை மாற்றி ஒரு புதிய போக்கை உருவாக்க முயற்சித்தால் அங்கே ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலான தமிழ் அரசியலானது நபர்களை, கட்சிகளை மையப்படுத்திய ஒன்றாகவே காணப்படுகின்றது. அதன் விளைவாகத்தான் தமிழ் மக்கள் வாக்காளர்களாக சிதறடிக்கப்பட்டார்கள். நபர்களை நலன்களை மையப்படுத்திய வாக்கு வேட்டை என்பது தமிழ் தேசிய அரசியல் கிடையாது. எந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலும் தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களைத் திரட்டுவதுதான். ஏனென்றால் தேசம் என்பது ஆகப்பெரிய மக்கள் கூட்டமாகும். எனவே மக்களை ஆகப்பெரிய கூட்டமாக கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியலில்.ஆனால் தமிழ்த் தேசிய அரசியலில் அது நடக்கவில்லை. கட்சி மைய அரசியலும் தனிநபர் மைய அரசியலும் மக்களைச் சிதறடித்து விட்டன.சிதறடிக்கப்பட்ட மக்களை தென்னிலங்கை கட்சிகள் மேலும் சிதறடிக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலின்போது தென்னிலங்கை மையக் கட்சிகள் பரிசுகளை வழங்கின; வாக்குறுதிகளை வழங்கின; போராட்ட கால நினைவுகளைத் தூண்டும் விதத்தில் அந்த காலகட்டத்தின் பாடல்களை பயன்படுத்தின. அவ்வாறு தமிழ் மக்களை கொள்கையல்லாத வேறு விடையங்களை நோக்கித் திரட்டலாம்; தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம் என்று தென்னிலங்கை மையக் கட்சிகள் கருதுமளவுக்கு தமிழ் மக்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்த் தேசிய அரசியலில் கொள்கைக்காக வாக்களிக்கும் போக்கு பலவீனமடைந்து விட்டது. இப்பொழுது தனி நபர்களுக்கும் கட்சிகளுக்கும் நலன்களுக்குமாக வாக்களிக்கும் அரசியல் பாரம்பரியந்தான் மேலோங்கியிருக்கிறது. எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று வன்னியைச் சேர்ந்த ஓர் அரசியல் செயற்பாட்டாளர் என்னைப் பல மாதங்களுக்கு முன்பு எச்சரித்தார்.

கொள்கைகளுக்காக வாக்களிக்கும் அரசியல் பாரம்பரியம் இல்லாமல் போகின்றது என்று சொன்னால் தமிழ்த் தேசிய வாக்கு வங்கி மெலிகிறது என்று பொருள். ஏனென்றால் தமிழ்த் தேசிய வாக்கு வந்து என்பது ஒரு கூட்டு மனோநிலைதான். தமிழ் மக்கள் மத்தியில் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் தோன்றிய வாக்களிப்பு அலைகள் யாவும் இனமான வாக்களிப்பு அலைகள்;அல்லது தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலைகள்தான். தமிழ் மக்கள் தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவ்வாறு இனமான அல்லது தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. எனவே தமிழ் மக்கள் மத்தியில் இதுவரை காலமும் தோன்றிய எல்லா வாக்களிப்பு அலைகளும் தமிழ்த் தேசிய வாக்களிப்பு அலைகள்தான். அதை மறுவளமாகச் சொன்னால் , தமிழ்க் கூட்டு மனோநிலை என்பது தமிழ்த் தேசிய மனோ நிலைதான்.அக்கூட்டு மனோநிலையை ஆக்கக்கூடியபட்சம் ஒன்றிணைத்து ஓர் அரசியல் ஆக்கசக்தியாக மாற்றுவதுதான் தமிழ்ப் பொது வேட்பாளரின் நோக்கம்.வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கூட்டும் மனநிலையைத் திரட்டிக் கட்டத் தவறினால் அடுத்தடுத்து நடக்கக்கூடிய நாடாளுமன்ற, மாகாண,உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அது மேலும் சிதறடிக்கப்படும். எனவே தமிழ் மக்களின் கூட்டு மனோ நிலையைப் பலப்படுத்தி தமிழ் மக்களை கொள்கைகளுக்காக வாக்களிக்குமாறு ஒன்றுபடுத்துவதற்கு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை விட வேறு தீர்க்கதரிசனம் மிக்க தெரிவுகள் உண்டா