LOADING

Type to search

இந்திய அரசியல்

“அமலாக்கத்துறை வருகைக்காக காத்திருக்கிறேன்!” – ராகுல் காந்தி

Share

அமலாக்கத்துறையை தன் மீது ஏவிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலைஅறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விதாதத்தின் போது ராகுல் காந்தி உரையாற்றியதாவது; “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளம் வீரர் 6 பேர் கொண்ட சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டான். சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் சக்கர வியூகத்தை பத்ம வியூகம் என்றும் சொல்வதுண்டு. இந்த 21-ம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார். அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே, இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள். இந்த சக்கர வியூகத்தின் மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன்பகவத், அஜித்தோவல், அம்பானி, அதானி ஆகிய 6 பேர் உள்ளனர் என்று பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த உரையின் விளைவாக அமலாக்கத்துறையை தன் மீது ஏவி விட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அமலாக்கத்துறையினரின் வருகைக்காகத் திறந்த கரங்களுடனும், தேனீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.