LOADING

Type to search

இந்திய அரசியல்

“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!

Share

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

     கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2வது நாளாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம். பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதலமைச்சரிடமும் வலியுறுத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.