LOADING

Type to search

உலக அரசியல்

மீண்டும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: பதற்றம்

Share

ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். கடந்த 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறியது. இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இஸ்மாயில் ஹனியா கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போர் பதற்றம் காரணமாக, லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.