அமைச்சரவை மாற்றம்? முதலமைச்சர் ஸ்டாலினின் பதில்!
Share
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படும் என்ற தகவல் வெளியான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசர கால -செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது இன்று மாலை அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் தனக்கு ஏதும் தகவல் வரலயே எனக் கூறினார். இதனால் காலையில் இருந்து அமைச்சரவை மாற்றம் குறித்து பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.