LOADING

Type to search

உலக அரசியல்

ஒஸ்லோவில் புதுமை நிறை அரங்கேற்றம்

Share

மாதவி சிவலீலன்

இதிகாசக் கதாபாத்திரங்களை மீள் வாசிப்புச் செய்யும் வகையில் பாடல்களை உருவாக்கி, அதற்கான நடன உருப்படிகளையமைத்துத் தமிழ் மரபோடு இணைந்த அரகேற்றமொன்றை நடன ஆசிரியர் கவிதாலக்ஷ்மி நோர்வேயில் நிகழ்த்தியிருந்தார். இருபது வருடங்களுக்கு மேலாக மாணவர்களுக்கு பரதக்கலையையும் இலக்கிய நுட்பங்களையும் போதித்து வரும் இவரது அரங்கேற்றங்கள் எப்போதும் பார்வையாளர்களைக் கவர்வதுடன் சிந்தனைக்கும் வலுச் சேர்ப்பனவாக இருப்பன. இவர், பன்முக ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டவர். நடன ஆசிரியர் என்பதற்கு அப்பால் நடன இயக்குனர், கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாசிரியர், ஓவியர். இலக்கியப் புலமையாளரெனப் பரந்த அறிவு நோக்கித் தன்னை வளப்படுத்தியுள்ளார்.  

கலாசாதனா கலைக்கூட நிர்வாகியாகவும் திகழும் கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள்  ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவருமே 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ  Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக்  கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக  அமைத்துத் தந்த ஆடலரசிகள்  இருவரும் ஆசிரியருடன் சேர்ந்து பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.

அலாரிப்புத் தொடக்கம் தில்லானா வரை தமிழ் இலக்கியம் உயிர் பெற்றிருந்தது. அலாரிப்பின் போது மூன்று திருக்குறட்பாக்களை ஆடலரசிகள் இருவரும் அபிநயித்திருந்தனர். தொடர்ந்து தாடகை, கூனி, இராவணன், பாஞ்சாலி, கூர்ப்பனகை, சிகண்டி, சகுனி என இதிகாசக் கதாபாத்திரங்களை அவர்தம் இயல்பில் நின்று தர்க்கரீதியான அவர்களது நியாயங்களை உணர்த்தும் வகையில் கவித்துவம், கதையாடல், வர்ணம், பதம், கீர்த்தனம் போன்றன அமைந்தன. நடனத்துக்குரிய பாடல்களை ரூபன் சிவராஜா, உமாபாலன், கவிதாலக்ஷ்மி ஆகியோர் யாத்திருந்தனர். தில்லானா நடன உருப்படி, கணியன் பூங்குன்றனாரின் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் செய்யுள் வரிகளை அபிநயிப்பதாக அமைந்திருந்தது. 

குரு தந்த அறிவை அப்படியே உள்வாங்கி இந்த அரங்கில் வெளிப்படுத்திக் குருவுக்கும் சபைக்கும் களிப்பையும் பெருமித்தையும் கொடுத்ததில் ஆடலரசிகள் ஹரிணி, தீபிகா இருவரதும் கெட்டித்தனம்  இருந்தது. பாவத்துடன் கூடிய அபிநயங்கள் எங்கள் கண்களைப் பரவசப்படுத்தின. ஒவ்வொரு கதாபாத்திரங்களாக மாறி இருவரும் நிகழ்த்திய கச்சிதமான நடன அசைவுகள் நாட்டிய நாடகத்தைப் பார்க்கும் உணர்வினைத் தந்தன. புதுமைகள நிறைந்திருந்த அரங்கேற்றமாக விளங்கிய காரணத்தால் அரங்கேற்றம் இன்னொரு பரிமாணம் பெற்றிருந்தது. 

கலை என்பது ஒரு யோகம் என கலாஜோகி கலாநிதி ஆனந்தகுமாரசுவாமி குறிப்பிடுவார். யோகம் என்பது சித்தத்தை அதாவது மனதை  விருத்தி செய்வது. மனம் விருத்தி பெறும் போது வாழ்வின் அனைத்து விடயங்களிலும் சிறப்பாக இயங்கக் கூடியவர்களாக விளங்குவர். இது ஆடலரசிகள் இருவருக்கும் பொருந்தும். நடனத்தோடு ஒன்றியிருந்த சபை, கரகோசம் எழுப்பித் தங்களது வியப்பையும் பாராட்டுதல்களையும் வழங்கினர்.

பக்கவாத்தியக்கலைஞர்களாக வாய்ப்பாட்டு ஹரிகரன் சுயம்பு, மிருதங்கம் பிரசாந் பிரணவநாதன், வயலின் அதிசயன் சுரேக்ஷ், வீணை சௌமியா ராமச்சந்திரன், நட்டுவாங்கம் கவிதாலக்ஷ்மி ஆகியோர்  அமர்ந்திருந்து நேர்த்தியாகத் தங்களது பணியைச் செய்தமையால் மேலும் சிறப்புப் பெற்றிருந்தது. சிறப்புரையை  மாதவி சிவலீலன் இலண்டனில் இருந்து வந்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பை கவிஞர் இளவாலை விஜேந்திரன் கலாசாதனா கலைக்கூட மாணவிகளௌம் இணைந்து திறன்பட அமைத்திருந்தார். ஆரம்ப சலங்கை பூசை தமிழில் அர்ச்சகர் சிவாஜினி ராஜன் அவர்களால் நடாத்தப்பட்டது. அனைத்தும் செம்மையுற அமையப் பக்கத்துணை நின்ற பெற்றோர்கள் போற்றுதற்குரியவர்களாவர். ஆடலரசிகள் இருவரதும் கலைப்பயணம் அழகுற அமையும் என்பதற்கு இந்த அரங்கேற்றம் முத்தாய்ப்பாக விளங்கியது.