LOADING

Type to search

சினிமா

நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Share

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டியுள்ளார். இது திரையுலகில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்துள்ளார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித் விலகியுள்ளார். மேலும், நடிகைகள் ஊர்வசி, பார்வதி திருவோத்து உள்ளிட்ட பல நடிகைகள், பாலியல் தொல்லை நடந்திருந்தால் தைரியமாக வெளியே சொல்லுங்கள் என சக நடிகைகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். இன்னும் சில நாள்களில் மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் புகார்களில் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.