LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பிரதமர் மோடி

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான மோதலில் அமைதியான ஒரு தீர்வு காணப்படுவதில் உந்துதல் ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார். அவருடைய இந்த பயணம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த பயணம் போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்திய உக்ரைன் பயணம் பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இந்த பயணம் பற்றி அவரிடம் விவாதித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், ரஷிய-உக்ரைன் மோதல் பற்றிய கருத்துகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். உக்ரைனுக்கான சமீபத்திய பயணம் பற்றிய என்னுடைய பார்வைகளையும் பகிர்ந்து கொண்டேன். இந்த மோதலில் விரைவான, நீண்டகால மற்றும் அமைதியான முடிவு ஒன்று ஏற்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டையும் மீண்டும் வலியுறுத்தினேன் என பகிர்ந்து உள்ளார்.