LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையில் பெண் வேட்பாளர்கள் இல்லாத ஒரு ஜனாதிபதி தேர்தல், ஆனால் பெண்களின் வாக்கு மட்டும் வேண்டும்!

Share

நடராசா லோகதயாளன்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கு தேர்தல் நடைபெற இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. மீண்டும் ரணிலா அல்லது அவரை விட்டு விலகிய சஜித்தா அல்லது வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு எதிரான அநுரவா அல்லது அடுத்த ராஜபக்ச வாரிசான நாமலா என்று கேள்விகள் நாற்புறமும் இருக்கும் நிலையில், ஆளில்லாத கடையில் தேநீர் தயாரிப்பது போன்று சரத் பொன்சேகா போன்றவர்களும் போட்டியில் உள்ளனர்.

ஆசை யாரை விட்டது. வெற்றி இல்லை என்று தெரிந்தும் போட்டியில் 30க்கும் அதிகமானவர்கள். இவர்களில் எவ்வளவு பேர் குறைந்த பட்சம் 2 லட்சம் வாக்குகளாவது பெறுவார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்தாலு, அவர்கள் அதை பற்றி கவலைப்படுவதாக இல்லை.

ஆனால், இந்த தேர்தலில் போட்டியில் ஓடுவது எல்லாம் ஆண் குதிரைகள். ஏன் பெண் குதிரைகள் ஓடவில்லை அல்லது ஓடவிடப்படவில்லை?

உலகில் முதலாவது பெண் பிரதமரைக் கொண்ட நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் கிடையாது என்பது சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் பெண்களே அதிகம் இருந்தும் நாட்டின் அதியுயர் பதவிக்கு போட்டியிட ஏன் ஒரு பெண்ணும் இம்முறை நிறுத்தப்படவில்லை என்பதற்கு யாரும் பதிலளிக்க தயாராக இல்லை.

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆடவர்கள் ஆதிக்கம் நிறைந்ததாகவே உள்ளது, பெண்கள் பார்வையாளர்களாக அல்லது வாக்குச் செலுத்தும் ஒரு மனித இயந்திராமகவே நடத்தபடுகின்றனர் என்று பெண்ணுரிமை அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் ஏன் ஒரு பெண் வேட்பாளர் குறித்து கூட சிந்திக்க மறுக்கின்றன என்ற கேள்விக்கு பதிலளிப்பார் யாருமில்லை.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி – கூட்டணி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அநுரகுமாரை திஸாநாயக்கவை களமிறங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகசாவை களமிறக்கியுள்ளது.
35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்ட 2019 ஜனாதிபதி தேர்தலின்போது ஒரேயொரு பெண் வேட்பாளர் அஜந்தா பெரேரா மட்டுமே போட்டியிட்டார்.

இலங்கையில் 1982 இல் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. சுதந்திரக்கட்சி தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் இருந்தமையினால் அன்று அத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. எனினும், 1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார். பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவராக விளங்கினார்.

இதேநேரம் 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது பிரதான இரு வேட்பாளர்களுமே பெண் வேட்பாளர்களாக திகழ்ந்தனர். சுதந்திரக்கட்சி தலைமையில் சந்திரிக்கா அம்மையாரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஸ்ரீமா திஸாநாயக்காவும் (காமினி திஸாநாயக்கவின் மனைவி) போட்டியிட்டனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபோது காமினி திஸாநாயக்க போட்டியிட்டபோதும் ஓர் குண்டு வெடிப்பில் அவர் கொல்லப்பட அனுதாபம் கருதி அவரின் மனைவி களமிறக்கப்பட்டார்.

1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் சந்திரிக்கா அம்மையார் களமிறங்கினார். அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்களாக பெண்கள் களமிறக்கப்படவில்லை.

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களிலும் எந்தவொரு பெண் வேட்பாளரும் கிடையாது. எனினும், கட்டுப் பணம் செலுத்த ஆகஸ்ட் 14 ஆம் திகதிவரை பெண் ஒருவரேனும் களத்தில் குதிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது.

பங்காளிகள் அதிகளவில் கைவிரிப்பு, கட்சி எம்.பிக்கள் ரணில் பக்கம் ஓட்டம் என்பவற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை (113) மொட்டு கட்சி இழந்து நிற்கின்றது.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 வெகுமதி ஆசனங்களுடன் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஈபிடிபியின் இரு எம்.பிக்கள், தேசிய காங்கிரஸின் அதாவுல்லா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையான், எமது சக்தி மக்கள் கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோரின் ஆதரவும் மொட்டு கட்சிக்கு உரித்தானது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் மொட்டு கட்சி வசமானது. சுதந்திரக்கட்சியின் அங்கஜனும் அரசுக்கு நேசக்கரம் நீட்டினார்.

புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கிய அண்மைக்காலத்தில் ‘தங்க மகன்’ என பெயர்பெற்ற அலிசப்ரி ரஹீமும் ஆளுங்கட்சி பக்கம் தாவினார். டயானா கமகே உட்பட மேலும் சில எதிரணி எம்.பிக்களும் அரசுடன் சங்கமித்தனர்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் பெரும் பலத்தைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சி மக்கள் போராட்டத்தில் ஆட்டம் கண்டது. 2022 மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த துறந்தார். அதன்பிறகு ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவும் நாட்டை விட்டு ஓடினார்.

2022 மே மாதம் முதலே மொட்டு கட்சி, கூட்டணி பிளவை சந்திக்க ஆரம்பித்தது. பங்காளிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறினர். எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள முடிவால் அக்கட்சி தற்போது பெரும் பிளவை – நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம் பக்கம் வளைத்து போட்ட ஜனாதிபதி மொட்டு கட்சியின் உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்துள்ளதார்.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாமல் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. புலிகளை உடைத்ததுபோல, மொட்டு கட்சியையும் ரணில் உடைத்துவிட்டார் என நாமலும் புலம்பி வருகின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்) , சுதந்திரக்கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

மொட்டு கட்சியின் 60 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் குழுவொன்றின் ஆதரவையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டு தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளதால் அரசியல் ரீதியில் மொட்டு கட்சி அநாதையாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் சாதாரண பெரும்பான்மை பலம்கூட (113) இல்லை. ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த 95 எம்.பிக்கள் ரணில் பக்கம் உள்ளனர். மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இரு தமிழர்கள், இரு முஸ்லீம்கள் ( ஒருவர் மரணித்துவிட்டார்) உளபட 39 வேடபாளர்கள் போட்டியிடும் இலங்கையின் 9 வது ஜனாதிபதிக்கான தேர்தல் செபரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு சகல பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றபோதும் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமும் வலுவாகவே உள்ளது.