தமிழரசுகட்சியிலிருந்து ‘சங்கு’ சின்னத்திற்கான ஆதரவு வலுப்பெற்று வருகின்றது.காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தெரிவிப்பு
Share
எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் ஜனாதிபதிகளாக வந்தவர்கள் தமிழ் மக்களுக்காக எந்தவொரு அரசியல் தீர்வையும் வழங்கவில்லை. இதற்கு காரணம் நாம் பல கட்சிகளாக பிரிந்து நின்று எமது வாக்குகளை சிதறடிப்பதுதான்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல துருவங்களாக பிரிந்து நிற்கின்ற பெரும்பாலான கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுக்கட்டமைப்பினூடாக பொது வேட்பாளராக மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரனை
சங்கு சின்னத்தில் களமிறக்கியுள்ளார்கள்.
உண்மையில் தமிழன் ஒருவன் இந்நாட்டில் ஜனாதிபதியாக வரமுடியாதுதான். இருப்பினும் நாம் சங்கு சின்னத்திற்கு அளிக்கின்ற வாக்கினூடாக சர்வதேசத்திற்கும், இலங்கை அரசிற்கும் ஒரு தீர்க்கமான செய்தியை சொல்லமுடியும்.
எமது தமிழரசுகட்சியிலிருந்தும் மெல்ல மெல்ல சங்கு சின்னத்திற்கான ஆதரவு வலுப்பெற்று வருகின்றது.தேர்தல் நெருங்கும் தறுவாயில் மேலும் பலரின் ஆதரவு பொதுவேட்பாளரிற்கு கிடைக்கும் என நான் பலமாக நம்புகின்றேன்.
என்னைப் பின்பற்றி வடகிழக்கு பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி சங்கு சின்னத்திற்கு வரலாறுகாணாத வாக்குகளைப் பெற்றுத்தரவேண்டும் என்பதோடு எனது முழுமையான ஆதரவை சங்கு சின்னத்தில் போட்டியிடும் திரு.அரியநேந்திரனுக்கு வழங்குவதோடு வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் செப்டெம்பர்21 ம் திகதி நேரகாலத்துடன் சென்று எமது ஒற்றுமையின் சின்னம் சங்கிற்கு வாக்களிக்குமாறு அன்புருமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.