LOADING

Type to search

இந்திய அரசியல்

“பணத்தால் பாஜக எங்களை விலைக்கு வாங்கமுடியாது” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

Share

பணத்தால் எங்களில் ஒருவரைக் கூட பாஜகவால் வாங்கமுடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாஜக எங்களின் அரசைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி வழங்குவதாக தெரிகிறது. ’ஆபரேஷன் தாமரை’ மூலம் மட்டுமே பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது. பாஜகவால் மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அவர்கள் கடந்த 2008, 2019ம் ஆண்டுகளில் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் ஆட்சியைப் பிடித்தது போலவே இந்த இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றனர். காங்கிரஸிடம் 136 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்கள் அரசை எளிதாகக் கலைத்துவிட முடியாது. குறைந்தது 60 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தால் மட்டுமே பாஜக-வால் ஆட்சியமைக்க முடியும். பணத்தால் எங்களில் ஒருவரைக் கூட பாஜகவால் வாங்கமுடியாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். நிதி ஆயோக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். 15வது நிதி ஆயோக், எங்கள் மாநிலத்திற்கு செய்த அநீதியை எதிர்த்து முன்னதாக நாங்கள் டில்லியில் போராட்டம் நடத்தினோம். ஆணையம் பரிந்துரைத்த ரூ.11,495 கோடி சிறப்பு மானியம் வழங்கப்படவில்லை. இதனால் மாநிலத்திற்கு 1.66 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 80,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறுகளை ஆணையம் சரிசெய்யும் என்று நம்புகிறோம். நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசுகளை அனுபவித்தது தொடர்பாக இதுவரை 9 சிறைப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.” இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.