”காணாமல் போனவர்கள் எண்ணிக்கை” மேற்குலகின் அறிவிலித்தனம்” என்கிறான் பொய்யனும் கோட்டாபாயவின் ‘கையாளுமான’ அலி சப்ரி
Share
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து போராடி வருகின்ற நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ‘மிகவும் குறைவானவை’ என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
அரகலய மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான சட்டத்தரணியான அலி சப்ரி, ஜேர்மனிய அரச தொலைக்காட்சியான டோய்ச்சு வெலெவிற்கு (Deutsche Welle) அளித்த செவ்வியில், காணாமல் போனவர்கள் தொடர்பில் நாட்டில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் 6,047 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் உள்ளதே என ஊடகவியலாளர் கேட்டதற்கு அதை கடுமையாக மறுத்தார் அலி சப்ரி. “அந்த எண்ணிக்கை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? உங்களுக்கு அதை யார் கூறியது. அது சில மேற்குலக நாடுகள் கூறும் அறிவிலித்தனம். இல்லை, அந்த 100,000 என்பது முற்றிலும் தவறானது. அது 6,047 மாத்திரமே” என அவர் கூறினார்.
அவரது இந்த கருத்து நம்பகத்தன்மையற்றது மற்றும் தீய உள்நோக்கம் கொண்டது என தமிழர்கள் கூறுகின்ற நிலையில், சர்வதேச அமைப்புகள் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மிக அதிக அளவில் குறிப்பிட்டுள்ளன.
“மக்களின் ஆயர்” என அறியப்படும் காலஞ்சென்ற முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அரச தரவுகள் மூலம், இறுதிகட்ட போரின் போது மாத்திரம் 146,679 பேர் காணாமல் போனார்கள் எனக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஆயர் கூறிய எண்ணிக்கையைவிட மிக மிக குறைவான எண்ணிக்கையை தனது செவ்வியில் கூறியுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை காணாமல் போனவர்களின் தொகை அதிகபட்சமாக 100,000 என தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
”இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் இருண்ட வரலாறு என்பது அங்கு மனித உரிமைகள் எப்படி துச்சமாக மதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அதன் காரணமாக உள்நாட்டு யுத்தம் மற்றும் இளைஞர்களி புரட்சி இடம்பெற்றது. உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 60,000-100,000 காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”
தனது செவ்வியில் இந்த எண்ணிக்கையை கடுமையாக மறுத்துள்ள அமைச்சர் அலி சப்ரி, இதற்கெல்லாம் புலம் பெயர்ந்த மக்கள் கணிசமாக வாழும் மேற்குலக நாடுகளே காரணம் என குற்றஞ்சாட்டி, அவை இலங்கை நிலவரத்தை ‘ஊதிப் பெருப்பித்து’ வருகின்றன எனவும் சாடியுள்ளார்.
“வாக்கு வங்கி அரசியலை வைத்து, மேற்குலக நாடுகள் இப்படியான கூற்றுகளை முன்னெடுக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்நாட்டிற்கு சென்று முக்கியமான இடங்களில் குடியேறியுள்ளவர்கள் அங்கு தேர்தல்கள் நடைபெறும் போது அவர்களது வாக்குகள் பெறுமதியானதாக உள்ளன. எனவே, இலங்கையை நோக்கிய அவர்களுடைய கொள்கையே புலம்பெயந்த மக்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது.”
இதேவேளை கடந்த 8 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் காணாமல் போன தமது உறவுகளை தேடி போராடி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை தொடர்ச்சியாக நிராகரித்து தமக்கு நம்பிக்கை இல்லை என கூறி வருகின்றனர். ஆனால் ஜேர்மனிய தொலைக்காட்சி செவ்வியில் அலி சபரி காணாமல் போனவர்கள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 2000 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் தமது அன்பிற்குரியவர்கள் காணாமல் போயுள்ளதாக 6,075 பேர் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் 5,776 பேர் மீண்டும் வந்துவிட்டனர். அதாவது 96% வீதமானவர்கள். எனவே, அது இலங்கை அரசின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. நாங்கள் அது தொடர்பிலான பணிகளை செய்து வருகிறோம். அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றையும் நாங்கள் அமைக்கிறோம்.”
எனினும் போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்கள் அந்த ஆணைக்குழுவை ஏமாற்று வேலை எனக் கூறி நிராகரித்துள்ளனர்.
மேற்குலக நாடுகளுக்கு எதிரான தமது சாடலை அந்த செவ்வியில் தொடர்ந்த அமைச்சர் அலி சப்ரி, பொறுப்புக்கூறலுக்கான வழிமுறை முற்றாக உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
“நாங்கள் உள்ளூர் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையில் உள்ளோம். எவ்வாறாயினும், உள்ளூர் வழிமுறைகள் மூலமே நாங்கள் ஒரு தீர்வை அளிப்போம். வேறு யாரும் இங்கு வந்து அது குறித்து விசாரிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சிலவற்றை குறித்து அவர்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் நாடுகளில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு 200, 300 வருடங்கள் ஆகியுள்ளன.”
தமிழர் பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் தொடரும் காணி அபகரிப்புகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் 96 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இது தவறான கருத்து என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். பல ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தால் பயிரிடப்பட்டு அவை வெளிச்சந்தையில் வர்த்தக ரீதியாக வியாபாரம் செய்யப்படுகின்றன, இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பில் தானும் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அலி சப்ரி அந்த செவ்வியில் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் தானும் பாதிப்படைந்ததாக கூறும் அவர், மேற்குலக நாடுகள் புலம்பெயர்ந்த மக்களின் சொற்களுக்கு செவி சாய்ப்பதைவிட நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
“திருமதி சந்திரிகா குமாரதுங்க மீது ஒரு குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த போது அதனால் நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவரும் வழியைப் பார்க்க வேண்டுமே தவிர, மேற்குலக நாடுகளிலுள்ளவர்கள் அல்லது வேறு எங்காவது உள்ளவர்களின் விருப்பப்படி நடக்க முடியாது, ஏனென்றால் நாங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ வேண்டும்.”
அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் வெளியாகியுள்ளதோடு, இந்த அமர்வின் முதல் நாளான செப்டெம்பர் 9ஆம் திகதி இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.