LOADING

Type to search

இந்திய அரசியல்

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது

Share

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, நடிகர் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அதனைப் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்ய அவர் விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து, கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த மாதம் 22-ம் தேதி விஜய் வெளியிட்டார். இதனிடையே கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இதனைத் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

மத்திய சென்னை மாவட்டம் சார்பில் சென்னை வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், பேருந்தில் சென்ற பயணிகள் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இந்த கொண்டாட்டத்தில், ஜப்பானில் இருந்து வந்த விஜய் ரசிகைகளும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பூக்கடை குமார் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக அங்கீகரித்துள்ளது. விரைவில் மாநாட்டுக்கான தேதியை மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் அறிவிப்பார். மேலும், மாநாட்டுக்கு எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி என்பது தவெக தலைவர் விஜய் கையில் தான் உள்ளது. கூட்டணிக்காக பலரும் விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தான் எதையும் அறிவிப்பார். மாநாட்டிற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தேதிக்காக மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறோம். மாநாட்டுக்கு பிறகு, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கான பதவிகளை பொதுச் செயலாளர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.