LOADING

Type to search

இலங்கை அரசியல்

சஜித்தை பிரேமதாசவைச் சூழ்ந்து பல ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகள் உள்ள நிலையில் சஜித்துக்கு வாக்களிப்பது தமிழர் விரும்பும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வராது.

Share

ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்து உள்ள போதிலும் சஜித்துடன் இணைந்துள்ள தமிழருக்கு எதிரான சக்திகள் மற்றும் மோடியின் கூட்டாளிகள், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சஜித்திடம் கையளிப்பது தமிழருக்கு உண்மையில் நன்மை அளிக்குமா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம் தமிழருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் தீவிர சிங்கள இனவாதியான பாட்டாளி சம்பிக்கவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு சிங்கள இனவாதிகளை தென்பகுதி கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கும் சஜித் மறுபுறம் வடக்கு கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தமிழரசுக் கட்சியினரையும் கிளிநொச்சியில் சமத்துவ கட்சியினரையும் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கடந்த காலங்களில் கோட்டாபய மற்றும் ராஜபக்சர்களுடன் இணைந்து தமிழருக்கு எதிரான கொடுமைகளுக்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தும் அனைத்து தரப்பினரதும் வாக்குகளை பெற முயற்சிப்பதனால் அவருடைய உண்மையான கொள்கை என்ன என்பதில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இன்னொரு புறம் அவர் தனது மேடைகளில் மோடி அரசாங்கத்தின் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை போல இலங்கையிலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போவதாக தெரிவித்த போதிலும் இதுவரை மன்னாரில் அமைக்கப்படவிருக்கும் இலங்கையை சுரண்டும் அதானியின் காற்றாலை திட்டம் மற்றும் இலங்கை கடலில் நாள் தோறும் 350 மில்லியன் பெறுமதியான கடல் வளத்தை சுரண்டும் இந்திய மீனவர்களை நிறுத்த எடுக்கும் நடவடிக்கை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பதும் இந்திய முகவர்கள் சஜித்தின் வெற்றிக்காக செயல்படுவதும் சஜித் வெளிநாடுகளின் சுரண்டல்களில் இருந்து நாட்டையும் தமிழரையும் பாதுகாப்பாரா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அனுரா வெளிப்படையாக அதானியின் காற்றாலை திட்டத்தை நிறுத்துவேன் என்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இலங்கை கடலில் இந்திய மீனவர்களின் சுரண்டல்களை நிறுத்துவேன் என்று தெரிவித்துள்ள நிலையில் சஜித் இவை தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிக்காத சூழ்நிலையில் சஜித்தை சூழவுள்ள கூட்டத்தில் பல ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் தமிழருக்கு எதிரான இனவாதிகள் உள்ள நிலையில் சஜித்துக்கு வாக்களிப்பது ஈழத்தமிழர் விரும்பும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வராது.

– Dr. முரளி வல்லிபுரநாதன் [9.9.2024]