LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரும் சுயேட்சை வேட்பாளரும்

Share

(எஸ்.ஆர்.ராஜா)

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடுகின்ற போதிலும் அதில் ஒரு சில வேட்பாளர்கள் இடையே மட்டுமே போட்டி காணப்படுகின்றது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலை காணப்படுகின்றது. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் எடுத்துக் காட்டும் நோக்குடன் பொது வேட்பாளராக தமிழ் மக்கள் சார்பில் பா. அரியநேந்திரன் சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இடம்பெறும் பிரச்சாரங்களுக்கு மக்கள் வருகின்ற (அழைத்து) எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஊடகங்கள் வாயிலாக காட்டப்படும் பிரச்சாரங்கள் ரீதியாகவும் பார்க்கும் போது முதல் குறிப்பிட்ட மூன்று வேட்பாளர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தெரிகிறது.

எனினும் பொதுவாக சிங்கள மக்களின் மத்தியில் நிலவிவரும் கருத்தின்படி அனுரகுமார திஸாநாயக்க அரசியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தான் வெற்றி பெற்றால் அந்த மாற்றத்தை மேற்கொள்வேன் எனவும் குறிப்பிட்டு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் கிராமங்கள் தோறும் மக்கள் மத்தியில் இந்தக் கருத்தினை விதைத்து வருகின்றமை காரணமாக மக்கள் அவரின் பக்கம் திருப்பியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எனினும் அனுரகுமார வெற்றி பெற்றால் தொடர்ந்து அரசாங்கத்தை நடாத்திச் செல்ல அமைச்சரவை வேண்டும் அவ்வாறான ஒரு பின்புலம் இவர்களிடம் கிடையாது எனவே, மீண்டும் கோட்டாபாய அவர்களின் ஆட்சியைப் போன்ற ஒரு நிலை தோற்றம் பெறும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனால் சிறந்த அரசியல் பின்புலத்தைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு வாக்களிப்பதன் மூலம் பொருளாதார மீட்சியைப் பெறலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் சிறந்த அரசியல் பின்புலம் கொண்ட பல அரசியல் வாதிகள் உள்ளதாகவும், வெளிநாடுகளுடன் உத்தியோக பூர்வமற்ற முறையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் பல நாடுகள் இலங்கையில் தமது அரசாங்கம் அமைந்ததும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது என அக் கட்சியின் சார்பில் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். அத்துடன் நின்று விடாது ரணில் விக்கிரமசிங்கவும் அனுரகுமாரவும் தமக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து செயற்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் அனுரவிடம் பின்புலத்தில் சிறந்த நபர்கள் இல்லை என குறிப்பிடும் இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருக்கும் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் அரச சொத்துக்களை கொள்ளையிட்ட கொள்ளைக் காரர்களே இணைந்து உள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

அதேபோல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவில்லை என்றும் அதனை உறுதிப்படுத்த கால அவகாசம் தேவை எனவும் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தொடர்ந்தும் நாடு வளர்ச்சி அடையும் என்றும் மாறாக மாற்றம் ஏதாவது செய்யப்பட்டால் அல்லது வேறு நபர்கள் ஜனாதிபதியானால் மீண்டும் எரிவாயு, எரிபொருள், உரம் போன்ற பொருட்களுக்கு மீண்டும் வரிசை யுகம் உருவாகும் எனவும் மக்களை எச்சரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் ரணிலால் மட்டுமே முடியும் என்ன தோரணையில் தமது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் பிரச்சார மேடைகளில் னுரவினை நண்பன் என அழைத்து வருவதுடன் சஜித் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாகச் செயற்படுவதுபோல் தெரிவின்றது.

அதேபோல் தமிழ்க் கட்சிகளின் சார்பில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்பாளர் பா.அரியநேந்திரன் இந்தப் போட்டியில் தான் ஜனாதிபதியாக வர முடியாது என்றாலும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் தென்பகுதிக்கான எதிர்ப்பையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டும் நோக்குடன் தாம் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தலைமைகள் மீதான நம்பிக்கையானது அற்றுப் போயுள்ளது. இது தமிழ்த்தலைமைகள் மத்தியில் காணப்படுகின்ற ஒற்றுமையீனமும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுமே இதற்குக் காரணமாகும்.

தமிழ்த் தலைமைகள் தற்போது நான்கு வகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. இதில் கூட்டமைப்பில் காணப்படும் அரசியல் தமைமைகளில் ஒருபகுதி சஜித் பிரேமதாஸாவினை ஆதரிப்பதாக குறிப்பிட்டு வரும் நிலையில் ஏனைய சிலர் பொதுவேட்பாளரை ஆதரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கூட்டப்பட்டபோது மாவை சேனாதிராசா அதில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீதரன் இலங்கையில் இல்லை. இந்த நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தின் சுமந்திரனும் அவரது சகபாடிகளும் இணைந்து சஜித்தை ஆதரிக்கும் முடிவினை எடுத்தனர். அதில் கலந்துகொண்ட கொழுப்பு கிளை தலைவர் சட்டத்தரணி தவராசா தான் இக் கருத்தை ஏற்கவில்லைஎன அன்றே குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஒரு பகுதியினர் பொதுவேட்பாளர் பா.அரியனேந்திரனை ஆதரிக்கவேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் – வகித்த ஏனைய கட்சிகள் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவில் உறுதியாக உள்ளன. இதற்கும் மேலதிகமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் தென் இலங்கைக்கு எமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தலைமைகள் நாலாபுறமும் சிதறுண்டு கிடப்பதானது தமிழ்; மக்கள் மத்தியில் வெறுப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் சார்ந்த நலனில் அக்கறை கொள்வதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தலைமைகள் ஒரே ஓர் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே எமது கருத்தினை தென்னிலங்கைக்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ வெளிப்பிடுத்த முடியும். எமக்குள் நாம் ஒற்றுமைப்படாதவரையில் எந்த முயற்சியும் வெற்றியைத் தரப்போவதில்லை என்பதே உண்மை.

ஏனெனில் மக்கள் தற்போது தமிழ்த் தலைமைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாக நேரடியாக தென்னிலங்கை பெரும்பாண்மை இனக் கட்சிகளின் பக்கம் சாயும் போக்கு அதிகரிக்கும். கடந்த காலங்களில் பெரும்பாலும் வடக்கில் பெரும்பாண்மைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறுவது இல்லை. ஆனால் தற்போது அத்தகைய போக்கு மாறி வருகின்றது. கடந்த தேர்தலைப் பார்த்தால் கூட தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

தற்போதைய நிலையில் பல தமிழ்த் தலைமைகள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் முடிவில் இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அத்தகைய தெளிவான ஒரு உணர்வை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதற்கான முயற்சியை ஒரு சில அரசியல் தலைமைகள் மேற்கொண்டு வந்தாலும் கூட பெரும்பாலான அரசியல் தலைமைகள் இவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தம் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.

இந்த ஜனாதிபதித் தேர்தல் இத்தகைய பொதுவேட்பாளரை நிறுத்தியமைக்கு பதிலாக எமக்கு ஓரளவுக்கு சாத்தியமான தீர்வை முன்வைக்கக் கூடிய ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்து அது தொடர்பாக அவருடன் முறையான பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி அதன் மூலம் அவர்களில் ஒருவருக்கு எமது ஆதரவினை வழங்கி அதன் மூலம் சில அனுகூலங்களைப் பெற முயற்சித்திருக்கலாம். கடந்த காலங்களில் இவ்வாறு செய்து நாம் எந்தப் பலனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே. எனினும் கடந்த கால தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்ட நிலையில் நாம் ஒருவரை ஆதரித்து அவர்களும் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றியமை வரலாறு.

ஆனால், இம்முறை முன்முனைப் போட்டி ஒன்று நிலவி வருகின்றது இங்கு சிங்கள மக்கள் வாக்குகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றபோது ஒரு வேட்பாளர் கூட பெரும்பாண்மையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஒன்று ஏற்படும். இதனால் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய விருப்பு வாக்குகளை எண்ணும் முறை பின்பற்றப்படவுள்ளது. சில வேளைகளில் நாம் ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை ஆதரிக்கின்ற போது அவருக்கு எமது மக்களின் சார்பில் உள்ள வாக்குகளில் ஒரு 60 சதவீதமான வாக்குகளை ஒரு வேட்பாளருக்கு பெற்றுக்கொடுக்கின்றபோது அவர் வெற்றிபெறும் சந்தர்ப்பம் ஏற்படும். இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகளாக காணப்படும். இதன் மூலம் ஏதாவது எமது எதிர்பார்ப்புக்களில் ஒரு பகுதியையேனும் படிப்படியாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று தற்போது இழக்கப்பட உள்ளதாகவே தோன்றுகின்றது.

பெரும்பாலும் வடக்கில் பொதுவேட்பாளர் ஒருவர் இல்லை எனில் மக்களின் தெரிவாக பெரும்பாலும் சஜித் அல்லது ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுவர். இவர்களில் ஒருவரை ஆதரிப்பதன் மூலமே அல்லது அவர்களின் கருத்துக்களை அறிந்து அதில் காணப்படும் குறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது வேட்பாளரை நிறுத்தி எமது எதிர்ப்பை முறையாக வெளிக்காட்டியிருந்தால் இம் முயற்சி பயனுடையதாக அமைந்திருக்கலாம். நாம் ஒன்றுமையாக இத்தகைய முடிவினை எடுக்காமையினால் மீண்டும் பாதிக்கப்படப்போவது எமது தமிழ்ச் சமூகம் மட்டுமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் சஜித்தை ஆதரித்தமையால் கோட்டாபய வெற்றிபெற்ற பின் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்;றே தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவரால் பதவிக் காலம் முழுவதும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, எமது அரசியல் தலைமைகள் சரியான முடிவை எடுப்பதற்கு முன் தமக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படத்திக் கொள்ளவேண்டும். தமிழ் தலைமைகள் ஒன்றுபடாதவரை எமக்கு தீர்வுகள் எவையும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்த் தலைமைகளில் ஒரு சிலர் எப்போதும் பெரும்பாண்மை கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் நிலைப்பாட்டிலேயே காணப்படுவர். ஏனையவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு நிலைப்படும் போது மக்கள் தாமாகவே எதிராக செயற்படும் தமிழ்த் தலைமைகளை நிராகரிக்கும் நிலை உருவாகும். இத்தகைய நிலை முன்னரும் ஏற்பட்டது எமக்கு தெரிந்ததே.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் குழப்பநிலை தொடர்பாக ஒரு முடிவினை எடுக்க முயாமல் தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் புலம்பிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்குக் கூட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான ஆதரவு நிலைப்பாட்டில் ஒற்றுமையான ஒரு முடிவுக்கு வர முடியாது உள்ளமை விருப்பத்தகாத ஒரு செயற்பாடாகும். எனவே, தலைமைத்துவம் ஒரு உறுதியான முடிவினை எடுக்கும் போது அதற்கு கட்டுப்படக் கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும். அல்லது தலைமையானது செல்லும் செல்லுக்கு ஏனையவர்கள் கட்டுப்படக்கூடிய ஒரு தலைமை உருவாக்கப்பட வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது.