LOADING

Type to search

இந்திய அரசியல்

நடிகர் டி.ஆர்.மிகமிக நல்லவர் – நான் பொய்யாக வாழ்ந்துவிட்டேன் என்கிறார் நடிகை நளினி

Share

பாலியல் சர்ச்சைகள் அதிகமாக அடிபடும் இந்தச் சமயத்தில் தனது திரையுலக அனுபவம் பற்றி நடிகை நளினி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் சினிமா உலகைக்கூட ஹேமா கமிஷன் அறிக்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த அறிக்கை ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பிறகு நிறைய நடிகைகள் தங்களின் கடந்தகால துயர சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நளினி, ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி அறந்த நடிகை. சிவாஜி, மோகன், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பலருடன் சேர்ந்து நடித்தவர். 1980களுக்குப் பின்னால் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் 2000 இல் விவாகரத்து பெற்றார். அப்போது அது மிகப்பெரிய செய்தியாக இருந்தது.

இவர் நடிப்பில் வெளியான நூறாவது நாள் திரைப்படம் மிகப்பெரிய த்ரிலர் மூவியாக பேசப்பட்டது. அத்துடன் அதைப் பார்த்து ஒருவர் கொலை செய்யும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. நளினி அதிக படங்களில் நடித்த நாயகி என்ற பெயரை எடுத்தவர். ஒரு வருடம் மட்டும் 24 படங்களில் நடித்தார். அதேபோல் மற்றொரு வருடம் அதை பிரேக் செய்யும் அளவுக்கு 25 படங்களில் அடித்தார். நடிகை நளினி டி. ராஜேந்திரன் ஆஸ்தான நடிகையாக இருந்தார். சமீபத்தில் நடிகை விசித்ரா அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவில் பாலியல் சர்ச்சையில் சிக்காத சுத்தமான நபர் டி. ராஜேந்தர்தான் என கூறியிருந்தார். அவருடன் அதிக படங்களில் நடித்தவர் நளினி. டி. ஆர் பற்றி நளினி அளித்துள்ள பேட்டியில், “அவர் சொன்னது 100% இல்லை. 200% அப்படியே உண்மை. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எங்கள் இயக்குநர் டி ராஜேந்தரை குரு ஸ்தானத்திற்கும் மேல் ஒரு தெய்வ ஸ்தானத்தில் அவரை நான் வைத்திருக்கிறேன். பெண்கள் விசயத்தில் அவர் ஒரு நெருப்பு. ஒருவர் தன்னை பார்க்கும் பார்வையை வைத்தே ஒரு பெண் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லிவிடுவாள். பெண்களை எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள். ஒரு பெண் தன் மீது இப்படியான சீண்டல் வரும்போதே அதை தைரியமாக எதிர்த்து வெளியே பேசி இருக்க வேண்டும். காலம் கடந்து சொல்வதால் யாருக்கு என்ன லாபம் சொல்லுங்கள்? அன்று நம் வாழ்க்கை பாதிக்கும் என்று பயந்துதானே மவுனமாக இருந்தார்கள். இப்போது அதைச் சொல்வதால் வாழ்க்கை பாதிக்காதா? நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறேன். எனக்கு ஒருமுறை கூட அப்படியான தொல்லைகள் வந்ததே கிடையாது. ஏனென்றால் என் அம்மா, அப்பா கூடவே படபிடிப்பில் இருப்பார்கள். அவர்களை மீறி தான் என்னைப் பார்க்க முடியும். பேச முடியும். அதனால் எனக்கு ஒரு தொல்லையும் வந்ததில்லை” என்கிறார்.

தனது இரண்டு குழந்தைகளையும் அதே கண்டிப்புடன் தான் வளர்ந்து ஆளாகி இருப்பதாகவும் இவர் சொல்கிறார். ஆனால் அதே கண்டிப்பு தனது முன்னாள் கணவர் ராமராஜனிடம் இருந்தது இல்லை என்கிறார். அதைப் பற்றிச் சொல்லும்போது, “அவரிடம் நான் அதே கண்டிப்பைக் காட்டியது இல்லை. நான் தான் அடங்கிப் போவேன். அந்தளவுக்கு நான் பொய்யாக வாழ்ந்திருக்கிறேன் என்பது இப்போது நினைக்கும்போது தோன்றுகிறது” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “விவாகரத்துக்குப் பின்னர் ஊடகங்களை அழைத்து இனிமேல் சத்தியமாக நடிக்கவே மாட்டேன் என்று பேட்டி கொடுத்தேன். ஆனால், இன்று எனக்கு அந்த நடிப்புதான் சோறு போடுகிறது. இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. ஒரு சீரியல் நடிக்கிறேன். மாதம் 10 நாட்கள் படபிடிப்பு மீதி நாட்கள் கோயில், குளம் என்று

சுற்றி வருகிறேன். வேறு என்ன வேண்டும். நிம்மதியான வாழ்க்கை எனக்கு. ஒருகுறையும் இல்லை” என்கிறார்.