LOADING

Type to search

இந்திய அரசியல்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரு மடங்கு உயர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

Share

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள். நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களை ஆதிக்கவாதிகளிடமிருந்து காக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கி, அவர்களெல்லாம் முன்னேறுவதற்கு வித்திட்ட சமூக நீதிக் காவலர் என்பது உலகறிந்த உண்மையாகும். அதாவது, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதேபோல, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள். இப்படி, மாற்றுத் திறனாளிகள் உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் ஏக்க உணர்வுகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்துள்ள இந்த ஆணைகளின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெருகும், ஆக்கம் சேரும், உற்சாகம் பொங்கும், அறிவொளி பரவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.