LOADING

Type to search

இந்திய அரசியல்

“உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது” – செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

Share

அமலாக்கத் துறையால கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், செந்தில் பாலாஜியை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

     முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்த சூழலில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளி வைத்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.