LOADING

Type to search

இந்திய அரசியல்

“இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Share

தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா மற்றும் டாடா நிறுவனத்தினர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும், டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடராஜன் சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.

ந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமானது டாடா நிறுவனம். உங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பல ஆண்டு உறவு இருக்கிறது உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய டெலிவிரி நிறுவனம் சென்னையில்தான் உள்ளது. ஹோட்டல் துறையில் தனி அந்தஸ்து பெற்ற தாஜ் ஹோட்டல்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளதால், நமது மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது. 1973ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ராணிப்பேட்டையில் தான் முதலில் சிப்காடை துவங்கி வைத்தார். தமிழ்நாடுதான் இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல்இடத்தில் உள்ளது என நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. டாடா நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம்தான் போடப்பட்டது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்தையும் செய்யும். அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.