முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 46 புதிய தொழிற்சாலைகள் திறப்பு – தமிழக அரசு
Share
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். 2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன்படி திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-2024ம் ஆண்டுக்கான கள ஆய்வையும் கணக்கெடுப்பையும் நடத்தியதில் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டில் 7.5 சதவிகித வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு தொடர்ந்து புரிந்துவரும் சாதனைகள் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் வரலாற்றைப் பறைசாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.