LOADING

Type to search

இலங்கை அரசியல்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியில் உருவான ஈவுட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலு பெயர் சூட்டவேண்டும்

Share

சுங்கை சிப்புட், அக்.03:

நாட்டில் 530-ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுங்கை சிப்புட் ஈவுட் தமிழ்ப் பள்ளி, பல கட்டங்களைக் கடந்து வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தொடக்கி வைக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இந்தப் பள்ளிக்கு மஇகா-வின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலனார் பெயரை சூட்ட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர் என்று மஇகா சுங்கை சிப்புட் தொகுதித் தலைவர் சின்னராசு வீரப்பன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன், சுமார் 3 ஆண்டுகளாக சுங்கை சுப்புட் தொகுதியிலேயே வாழ்ந்தவர் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன்.

2008 பொதுத் தேர்தலின்போது இழந்த அத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலட்சியத்தில் முழுமூச்சுடன் பாடுபட்ட அந்த நேரத்தில், பேராக் மாநிலத்தின் அரச நகரான கோல கங்சார் மாவட்டத்தையும் உலு பேராக் மாவட்டத்தையும் உள்ளடக்கிய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு புதிய தமிழ்ப் பள்ளியை உருவாக்கி சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுத்த முயற்சிக்கு துணை நின்றவர் அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்.

5.9 ஏக்கர் நிலப்பரப்பில் 11.1மில்லியன் வெள்ளி கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்த தேசிய முன்னணி அரசு சார்பில், முதற்கட்டமாக 3.3மில்லியன் வெள்ளியையும் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், 2018 மே மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தால், இந்தப் பள்ளிக்கான கட்டுமானம் நிலைகுத்தி நின்றது.

இந்த நிலையில், பலகட்ட முன்னெடுப்பிற்குப்பின், 2020-ஆம் ஆண்டில், இந்தப் பள்ளியின் கட்டுமானம் தொடர முடிவெடுக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர முடியாத நிலை உருவானது; காரணம், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட விலையேற்றம் மற்றும் பொருளாதார சூழல்; இதனால், 2மில்லியன் அதிகரிக்கப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்த நிலையில் இப்பொழுது பள்ளிக் கட்டுமானம் நிறைவடைந்து ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தப் பள்ளியைத் தொடக்கி வைக்க இருக்கிறார்.

பிரதமர் தொடக்கி வைக்க இருக்கும் முதல் தமிழ்ப் பள்ளி இது என்பதில் மகிழ்ச்சி என்றாலும், சுதந்திர மலேசியாவில் தேசிய முன்னணி அரசு உரிமத்துடன் அங்கீகரித்த ஏழு புதிய தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

530ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு அடித்தளம் இட்டது மஇகா-வும் அதன் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதும் இந்தப் பள்ளியில் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அதை அங்கீகரிக்கும் வகையில், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 34 ஆண்டுகள் செயல்பட்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் கடந்த நூற்றாண்டின் தேசிய கட்டுமான நாயகன் என்று பாராட்டப்பட்டவரும் பொதுப்பணித்துறையின் அந்நாளைய அமைச்சருமான துன் சாமிவேலனாரின் பெயரை இந்தப் பள்ளிக்கு சூட்டும்படி சுங்கை சிப்புட்வாழ் இந்திய மக்களின் சார்பாக கேட்டுக் கொள்வதாக வீ.சின்னராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒற்றுமை அரசுக்கும் பிரதமருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.