LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் போரில் வடகொரிய வீரர்கள் உயிரிழப்பு – தென்கொரியா அதிர்ச்சி தகவல்

Share

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போரானது, 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதேபோன்று, ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரஷியா மற்றும் வடகொரிய தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது போரை தீவிரப்படுத்தும் செயல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது என்றும் கூறினார். இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் 300 வடகொரிய வீரர்கள் பலியாகியும், 2,700 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. தென்கொரிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியாங்-வீஅன் தேசிய புலனாய்வு துறையின் (என்.ஐ.எஸ்.) அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது வடகொரிய வீரர்களின் மரணம் பற்றிய இந்த தகவலை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறும்போது, ரஷியாவுக்கு ஆதரவாக குவிக்கப்பட்ட வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளனர் என்றார். என்.ஐ.எஸ். துறையின் ஆய்வின்படி, நவீன போர் கருவிகளை பற்றிய புரிதல் வடகொரிய வீரர்களுக்கு இல்லை. போதிய அளவுக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத அவர்களை ரஷியா பயன்படுத்தி கொள்கிறது. அந்த வகையில், வீரர்கள் இடையே அதிக அளவில் காயங்களும், மரணங்களும் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.