LOADING

Type to search

இலங்கை அரசியல்

அநுரகுமார ஆட்சிக்கு வில்லனான ”டித்வா ” ?

Share

2004 டிசம்பர் 26 இலங்கையில் ”சுனாமி” பேரழிவை ஏற்படுத்திய போது அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ”சுனாமி பொதுக்கட்டமைப்பு”ஒன்றை அமைத்து அதன் மூலம் வடக்கு,கிழக்கு மக்களுக்கு உதவ முயன்றபோது அதனை எதிர்த்து பாராளுமன்றத்திற்குள் போராடியதுடன் நீதிமன்றத்திற்கும் சென்று அதனை இல்லாமலாக்கி ”அரசியல்”செய்த ஜே .வி.பி. தான் இன்று ”டித்வா” இயற்கைப் பேரழிவின் போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக ஒப்பாரி வைக்கின்றது .இதுதான் ”கர்மா”

–கே.பாலா

இலங்கையின் அரசியலில் மக்கள் எழுச்சி மூலம் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரின் ஜே .வி.பி.-  தேசியமக்கள் சக்தி அரசும் ஒரு வருட கால ஆட்சிக்குள் இலங்கை அரசியலில் எந்த ஜனாதிபதியும் அரசும் எதிர் கொள்ளாதளவுக்கு சர்வதேச , உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள், சர்ச்சைகள், குற்றச் சாட்டுக்கள், விமர்சனங்கள், கேலிகளுக்குள் சிக்கி படாதபாடுபட்டு ”ஆயுசு நூறு நித்தம் கண்டம்” என்றவகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில் இயற்கையும் தன் பங்கிற்கு விட்டேனா பார் என்ற வகையில் ”டித்வா ”புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது.

”டித்வா ”புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்களும் மட்டுமன்றி ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. அந்தளவுக்கு இயற்கை உயிரழிவுகளை மட்டுமன்றி இலங்கை மீண்டெழ முடியாதளவுக்கு பொருளாதார ரீதியில் பேரழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக ”டித்வா” புயல் பதிவாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு இலங்கையை புரட்டிப்போட்ட சுனாமி ஏற்படுத்திய பொருளாதார ரீதியான அழிவை விடவும் அதிகமான பொருளாதார அழிவை ஏற்படுத்தி அநுரகுமார ஆட்சியாளர்களுக்கு ”சிவப்பு எச்சரிக்கை ”விடுத்துள்ளது

இலங்கையை கடந்த வாரம் மிரட்டிய ”டித்வா ” புயலின் விளைவால் கொட்டித் தீர்த்த மழையினாலும் புயல் காற்றினாலும் முழுநாடும் வெள்ளத்தில் மூழ்கியது .மலைகள் சரிந்தன ,ஆறுகள்,அணைக்கட்டுகள், குளங்கள் உடைப்பெடுத்தன.வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள்,வீடுகள்,வீதிகள் ,கட்டிடங்கள் ,வர்த்தக நிலையங்கள் தகர்ந்தன.பாரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன பல மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன. . இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 250க் கும் அதிகமான வீதிகள் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளன. 15 பாலங்கள் வரை அழிந்துள்ளன.பல ஆயிரம் தொழில்கள் அழிக்கப்பட்டு விட்டன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த டித்வா புயலின் கோரத் தாண்டவத்தினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் 350 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகின. நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபா சொத்தழிவுகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. ”டித்வா” புயல் வெள்ளம் ஆகியவற்றின் இந்தக் கோரத் தாண்டவங்களினால் நாடு எதிர்கொள்ள இருக்கும் நிலைமை மிகவும் கடினமானது என்றால் அநுரகுமார அரசு எதிர்கொள்ளப்போகும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகள், சவால்கள் மிகப் பயங்கரமானதாக இருக்கப் போகின்றன .

இலங்கைக்கு இயற்கை ஏற்படுத்திய இந்தப் பேரழிவை ,அதன் விளைவுகளை ,அந்தப் பேரழிவிலிருந்து மீண்டெழும் சவாலை ஒரு புதிய அரசாங்கமாக,அனுபவமற்ற அமைச்சர்களைக் கொண்டவர்களாக,சிவப்பு சட்டை அரசியல்வாதிகளாக,சீன சார்பு கொள்கையுடையவர்களாக, மேற்குலக நாடுகளினால் வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுபவர்களாக, நாட்டிலுள்ள எதிர்கட்சிகளினால் மிகவும் வெறுக்கப்படுபவர்களாக, ஜே .வி.பி. கட்சித்தலைமை எடுக்கும் முடிவையே அரசாங்கத்தின் முடிவாக அறிவிக்கும் நிலையில் இருக்கும் இந்த அநுரகுமார தலைமையிலான ஆட்சியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதே இன்றுள்ள மிகப்பெரும் கேள்வி.

அதனால்தான் ”ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் .முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும்.இந்தப் பேரழிவு நடந்துள்ள தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும்”என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த காலத்திலே சுனாமிக்குப் பின்னர் அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து ”சுனாமி பொதுக்கட்டமைப்பு”ஒன்றை அமைத்து அதன் மூலம் சுனாமியால் பேரழிவை சந்தித்த வடக்கு,கிழக்கு மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முற்பட்ட போது, இதே ஜே .வி.பி.தான் அதனை அனுமதிக்கக் கூடாது என்று பாராளுமன்றத்திற்குள் போராட்டம் செய்ததுடன் நீதிமன்றத்திற்குச் சென்று சுனாமி பொதுக்கட்டமைப்பை உடைத்தெறிந்தது.அதே ஜே .வி.பி.தான் இன்று ”டித்வா”இயற்கைப் பேரழிவை சந்தித்த மக்களுக்கு உதவ எதிர்க்கட்சிகள்.பொது அமைப்புக்கள் ஒத்துழைக்க வேண்டுமென அழைப்பு விடுகின்றது.

இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஒரு வாரத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் அநுரகுமார அரசாங்கம் அதனை கவனத்தில் எடுக்காமையே இந்தளவு பேரழிவுகள் ஏற்படவும் மக்கள் உயிரிழக்கவும் காரணமென ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக குற்றம் சாட்டுகின்றன.அதாவது இயற்கை அனர்த்தத்தை தடுக்க முடியாதென்றாலும் அதனால் ஏற்படும் அழிவுகளை தடுத்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்பதுவே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.அதனால்தான் இது இயற்கையால் ஏற்பட்ட பலிகள் அல்ல.கொலை. இயற்கை அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதும் தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது என்கின்றன எதிர்க்கட்சிகள்.

நவம்பர் 12ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தினால், இவ்வாறான மிகவும் ஆபத்தான இயற்கை அனர்த்த நிலைமை ஏற்படும் என எச்சரிகை விடுக்கப் பட்டிருந்தது.பொதுவாக அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, எமது நீர் நிலைகளில் இருந்து, தண்ணீரை படிப்படியாக குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். அது வழமையான நடவடிக்கை . ஏனெனில் ஒரு வாரத்தில் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என நினைத்து வான் தகவுகளை திடீரென திறந்தால், மக்கள் மூழ்கிவிடுவார்கள்.ஆனால் கடைசி நேரம் வரை நீர் நிலைகளின் நீரை திறந்துவிட வில்லை. நீரை படிப்படியாக விடுவித்திருந்தால், இந்த இயற்கை அனர்த்தத்தில் பலியான உயிர்களில் 75வீதமானோரின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடிந்திருக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன .அதில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. அனுபவமற்ற அரசு என்பதனால் அவர்கள் இந்த எச்சரிக்கை தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

இதனால் தான் கடந்த 1 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அரசு மறுத்து வரவு செலவுத்திட்ட விவாதத்தை நடத்த முயற்சித்த நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.எதிர்க்கட்சிகள் அனைத்தும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்ததால் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தை முன்னெடுத்து செல்ல முடியாததால் சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்பட்டது. அன்று இயற்கை அனர்த்தம் தொடர்பில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கியிருந்தால் அரசாங்கம் மக்கள் மத்தியில் அவப்பெயரையும் பழியையும் சுமக்க வேண்டியேற்பட்டிருக்கும்.

அநுரகுமார அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அமைச்சுப் பொறுப்புக்களில் இருப்பவர்களில் 90 வீதமானோர் புதுமுகங்கள்.எந்த அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் அற்றவர்கள்.ஜே .வி.பி.யின் தலைமையகமான ”பெலவத்தை”அலுவலகம் சொல்வதை மட்டும் செய்பவர்கள். தமது சம்பளத்தையே கட்சிக்கு தானம் செய்பவர்கள் இவர்கள் மூளையை நம்புவதில்லை. தமது வாய்ப்பலத்தையே (ஆவேசப் பேச்சு-பிரசாரம்) நம்புகின்றவர்கள்.சர்வதேச நாடுகளின் நன்மதிப்பை பெறாதவர்கள்.இவ்வாறானவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்டெடுப்பார்கள்? ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவை எவ்வாறு சீர் செய்வார்கள்? என்பதுவே பொதுவாகப் பல தரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ள கேள்வி .

ஆனால் எப்போதும் போலவே வாயால் வடை சுடுபவர்களான அநுரகுமார அரசினர் இந்த விடயத்திலும் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சிப்பதுடன் இயற்கை பேரழிவால் பொருளாதாரத்தில் மூழ்கிய நாட்டை மிக சுலபமாக மீட்டெடுத்து விடுவோம் என்ற கணக்கில் வாய்ச்சவடால்களை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் ஏற்கனவே பொருளாதார ரீதியில் படுபாதாளத்திலிருக்கும் இலங்கையை இந்த ”டித்வா” பேரழிவு இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ள நிலையில் அதிலிருந்து விரைவில் மேலெழுந்து வருவதென்பது கற்பனைக் கதையாக மட்டுமே இருக்க முடியும்.

மைத்திரி-ரணில் நல்லாட்சியில் நடத்தப்பட்ட ”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்” களை அரசியலுக்கு பயன்படுத்தியமையாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காமையாலும் நல்லாடி அரசு மக்களினால் விரட்டியடிக்கப்பட்டது. அதேபோன்று கோத்தபாய அராஜபாக அரசில் ”கொரோனா” வாழ் ஏற்பட்ட பொருளாதார பேரழிவை சரியான முறையில் கையாளாது மக்களின் வாழ்வதாரத்தோடு விளையாடியதால் கோத்தபாய நாட்டை விட்டு தப்பியோட வேண்டியேற்பட்டதுடன் அரசும் கலைந்தது. எனவே மைத்ரி-ரணில் நல்லாட்சிக்கு எப்படி ”உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்” முடிவு கட்டியதோ கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு எப்படி ”கொரோனா ” முடிவு கட்டியதோ அதுபோன்று அநுரகுமார ஆட்சிக்கு இந்த ”டித்வா” இயற்கைப் பேரழிவு முடிவு கட்டும் என்ற அரசியல் விமர்சனங்கள் உண்மையாகுமா என்பதனை இன்னும் சில மாதங்களில் தெரிந்து கொள்ள முடியும்.