அமெரிக்க-ஈரான் போரில் இலங்கை யார் பக்கம்…?
Share
”கடன்பட்டார் நெஞ்சமாக கலங்கி நிற்கின்றார் இலங்கை வேந்தர் அநுர”
”இலங்கைக்கு நண்பர்களாகவிருந்து கடன்கொடுத்தவர்கள், இராணுவ, பொருளாதார, ரீதியில் உதவியவர்களிடையில் ஏற்பட்டுள்ள போரில் அவர்களிடம் உதவிகளை பெற்றவர்கள் என்ற வகையில் யாருக்கு ஆதரவளிப்பது , யாரைக் கண்டிப்பது என்பதில் இலங்கை என்ற அடிப்படையில் அரசாங்கமாக முடிவெடுப்பது உண்மையில் அநுரகுமார அரசாங்கத்திற்கு இராஜதந்திர சிக்கல்கள் நிறைந்த விடயம் .அதனால்தான் ”கடன்பட்டார் நெஞ்சமாக கலங்கி நிற்கின்றார் இலங்கை வேந்தர்”
கே.பாலா
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போரைத்தொடுத்துள்ள நிலையில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் மத்திய கிழக்கு நாடுகள் ஏவுகணை, விமானத் தாக்குதல்களினால் அதிர்ந்தும் அழிந்தும் வரும் நிலையில் இந்த போர் அணு ஆயுத யுத்தமாக மாறிவிடுமோ என்ற பேரச்சம் எழுந்துள்ளது.இவ்வாறான நிலையில் இந்த போர் மீது மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்தவில்லை.மாறாக, இந்த போர் தொடர்பில் எந்த நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவளிக்கின்றன, எந்த நாடுகள் ஈரானுக்கு ஆதரவளிக்கின்றன என்றும் உலகம் உற்று நோக்குகிறது.
இந்தப் போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதா அல்லது ஈரானுக்கு ஆதரவு வழங்குவதா என்பதில் உலக நாடுகள் பலவும் குழம்பிப் போயுள்ள நிலையில் சில நாடுகள் பகிரங்கமாக அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இன்னும் சில நாடுகள் ஈரானுக்கும் ஆதரவு வழங்குகின்றன .ஆனால் . யாருக்கு ஆதரவு என்ற முடிவில் இலங்கை மௌனம் காப்பதும் , நடு நிலைமைப் போக்கை கடைப்பிடிப்பதும் ஆன்மீகத் தலைவர்,பொதுமக்களின் உயிரிழப்புகளைக்கூட கண்டிக்காதிருப்பதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் எதிர்கட்சிகளிடமும் முஸ்லிம் மக்களிடமும் கடும் விமர்சனங்களையும் விசனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை ஒரு நாடென்ற வகையில் ஏன் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்த நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ‘மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமை ‘ தொடர்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த உரையில் கூட இலங்கையினதோ அரசினதோ நிலைப்பாட்டை அறிவிக்காது மேலோட்டமாகவும் பொதுவாகவும் பேசியதுடன் எரிபொருள் தொடர்பில் மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தமை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
”எந்தவொரு யுத்த மோதலும் எந்தவொரு சமூகத்திற்கும் சாதகமாக அமைவதில்லை. உலகில் அவை எந்தளவு அழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். இந்த யுத்தத்துடன்தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகத்திற்காக அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டல் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்”இதுதான் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தொடர்பிலான இலங்கையினதும் அரசினதும் நிலைப்பாடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட உரையில் கூறப்பட்டிருந்தது.
இலங்கையினதும் அரசினதும் இந்த ”மதில் மேல் பூனை”நிலைப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. ”அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் ஜே.வி.பி கொண்டிருந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல், மிகவும் தந்திரமான முறையில் சந்தர்ப்பவாதியாக மாறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார் என்பதே எதிர்க்கட்சிகளினது குற்றச்சாட்டு. அத்துடன் இந்தப்போரில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஈரானுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலாகவுள்ளது.
”மத்திய கிழக்கில் 10 இலட்சம் வரையிலான இலங்கையர் பணியாற்றுகின்றனர். அத்துடன் எரிபொருள் வளம், எரிவாயு வளம் தொடர்பான பிரச்சினைகளும்உள்ளன . இது எமது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் வெளிநாட்டு கொள்கை என்ன என்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி இந்த சபையில் இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு, அங்கு ஆன்மீக தலைவரை கொலை செய்தது தவறு என்று நாட்டின் ஜனாதிபதியாக இந்த பாராளுமன்றத்தில் யோசனையொன்றை நிறைவேற்றி உலகத்திற்கு செய்தியொன்றை வழங்குவார் என்று நம்பினோம். ஆனால் ஜனாதிபதி அது தொடர்பில் கதைக்காமல், அந்த விடயத்தை தவிர்த்து அமைச்சர்கள் கூற வேண்டிய விடயங்களையே கூறினார்.
ஜனாதிபதி மிகவும் தந்திரமாக சந்தர்ப்பவாதியாக அவரின் அரசியல் செயற்பாட்டில் ஜே.வி.பி கடந்த காலங்களில் கொண்டிருந்த நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது அமெரிக்கா, இஸ்ரேல் உலகில் மற்றைய நாடுகளுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை அவதானித்துள்ளோம். அவர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். வெனிசுலாவுக்கு தாக்குதல் நடத்தும் போதும் எதிர்ப்பை வெளியிட்டனர். இப்போது எங்கே அந்த வெளிப்படைத்தன்மை?
ஜே.வி.பி போன்ற அரசியல் இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டியெழுப்பி அதனுடாக ஆட்சிக்கு வந்த பின்னர் அது தொடர்பில் இப்போது கதைப்பதில்லை. அது தொடர்பில் கதைக்காமல் ஜனாதிபதி மெதுவாக நழுவிச் சென்றுள்ளனர்.இந்த நாட்டில் இதுபோன்ற நிலைமைகளில் அச்சமின்றி தீர்மானங்களை எடுத்த தலைவர்கள் இருக்கின்றனர். மாற்றமில்லாத வெளிநாட்டு கொள்கைகளை கொண்டவர்கள் இருந்தனர். அவர்களை விடவும் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள் என்று நினைத்தோம். ஆனால் இப்போது நீங்கள் முழுமையாக காட்டிக்கொடுப்பதையே செய்துள்ளீர்கள். ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஒரு வசனமேனும் பேசாமல் போய்விட்டார். ஏகாதிபத்தியத்துடன் இணைந்த இஸ்ரேல் சார்பான ஆட்சியாளர்களாக மாறியுள்ளீர்கள்.
நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் முதலில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போயிருப்பீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் முற்றிலும் மாறிவிட்டீர்கள்.ஈரான் என்பது எமக்கு மிகவும் உதவிகளை செய்த நாடு. அபிவிருத்தி நடவடிக்கைகள், எரிபொருள் வழங்கல் ஆகியவற்றில் உதவிகளை செய்துள்ளது. 2015இல் பெற்ற எரிபொருளுக்கான பணத்தையும் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. நாங்கள் அந்த நாட்டுக்கு கடன்பட்டுள்ளோம். அவ்வாறான நாட்டுக்காக முன்னிற்பதற்கு எமக்கு முடியாமல் இருக்கின்றது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
ஆனால் எதிர்கட்சியாக இருக்கும்போது தமது விருப்பப்படி எதனையும் செய்யலாம், கூறலாம். யாரையும் ஆதரிக்கலாம், எதிர்க்கலாம்.ஆர்ப்பாட்டம் செய்யலாம் . அரசாங்கம் என வந்து விட்டால் தமது கட்சியினதோ ஏனைய கட்சிகளினதோ அல்லது நாட்டு மக்களினதோ விருப்பப்படி நடந்து கொள்ள முடியாது. அதற்கென சில விதிமுறைகள், வெளிநாட்டுக் கொள்கைகள் ,இராஜதந்திரங்கள், அழுத்தங்கள் உள்ளன. அந்தவகையில் ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் யாரையும் ஆதரிக்கவோ , எதிர்க்கவோ முடியாத ”இருதலைக் கொள்ளி எறும்பின்” நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளது.
இலங்கை போரினாலும் பொருளாதாரத்தினாலும் இயற்கையினாலும் மோசமாக பாதிக்கப்பட்ட , பாதிக்கப்பட்டுவரும் நாடு என்றவகையில் சகல நாடுகளிடமும் உதவி பெற்றுள்ள ஒரு நாடு.இலங்கையில் நடந்த போருக்கான உதவி, பொருளாதாரத்திற்கான உதவி, அபிவிருத்திக்கான உதவி, இயற்கைப் பேரனர்த்தங்களுக்கான உதவி, எரிபொருளுக்கான உதவி என பலவகை உதவிகளையும் இலங்கை பல நாடுகளிடமிருந்து பெற்றுள்ளது. பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் ,ஈரான் ஆகிய 3 நாடுகளும் இலங்கைக்கு உதவிகள் வழங்கிய, வழங்கி வரும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் நாடுகளாகவுள்ளன.
ஈரானைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகளுடனான இலங்கை அரசாங்கத்தின் போரின்போது இரகசிய இராணுவ கடன்கள் மற்றும் உபகரணங்கள்,கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் வழங்கியது.இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை குறைந்த விலையில் வழங்கியது.இலங்கை இராணுவத்தினர் ஈரானில் பயிற்சிகள் பெற்றனர். ஈரான் இலங்கை அரசை பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் நாடாக காட்டி, அதிகாரபூர்வ ஆதரவை வழங்கி இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை தடுக்க உதவியது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக கருதப்பட்ட ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு 2024 ஆம் ஆண்டு செய்த விஜயம் இலங்கை-ஈரான் நெருக்கத்தின் வெளிப்பாடாகவே இருந்தது
இவை மட்டுமன்றி இலங்கைக்கு ஈரானிடமிருந்து இதுவரை மின்சக்தி, நீர்ப்பாசனம், சுகாதாரம் மற்றும் மனிதாபிமான ரீதியில் பல்வேறு முக்கிய உதவிகள் கிடைத்துள்ளன.இதில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் 120 மெகாவாட் தூய மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது.இதுபோன்று நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி, சுகாதாரத் துறை உதவிகள் என பல் உதவிகளை ஈரான் இலங்கைக்கு வழங்கி வருகின்றது
இதேபோன்றே அமெரிக்கா இலங்கைக்கு போர் ,விவசாயம், கல்வி, சுகாதாரம், எரிசக்தி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை என்பவற்றுக்காக பாரிய நிதியுதவிகள் மற்றும் முதலீடுகளை வழங்கியுள்ளது. வழங்கி வருகின்றது அதுபோன்றே இஸ்ரேலும் இலங்கைக்கு பெரும்பாலும் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உதவிகளை வழங்கி வந்துள்ளது. உள்நாட்டுப் போரின்போது ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை , இராணுவ பயிற்சிகளை வழங்கியதோடு, விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் அண்மைய காலத்தில் அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளையும் வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசாங்கம் போரில் ஈடுபட்டபோது இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட் இலங்கையில் தளம் அமைத்து இலங்கை இராணுவத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்தது.
ஆக மொத்தத்தில் இலங்கைக்கு நண்பர்களாகவிருந்து கடன்கொடுத்தவர்கள், பொருளாதார,இராணுவ ரீதியில் உதவியவர்களிடையில் ஏற்பட்டுள்ள போரில் அவர்களிடம் உதவிகளை பெற்றவர்கள் என்ற வகையில் யாருக்கு ஆதரவளிப்பது , யாரைக் கண்டிப்பது என்பதில் இலங்கை என்ற அடிப்படையில் அரசாங்கமாக முடிவெடுப்பது உண்மையில் அநுரகுமார அரசாங்கத்திற்கு இராஜதந்திர சிக்கல்கள் நிறைந்த விடயம்தான். ”ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம்…இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்”என்பதுபோன்ற சிக்கலில் தற்போது இலங்கை மாட்டிக் கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கை கடற்பரப்புக்கு அண்மையில் வைத்து ஈரான் கடற்படைக் கப்பல் அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்ட போது அந்தக் கப்பலில் இருந்து காயமடைந்த ஈரான் கடற்படை வீரர்களை இலங்கை காப்பாற்றிய நிலையில் அது தொடர்பிலான நெருக்கடிகளையும் இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளதுடன் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்த இலங்கை மறைமுக அனுமதியை வழங்கியதாக ஒரு தரப்பினரும் ஈரான் கடற்படையினரை காப்பாற்றியதன் மூலம் இலங்கை ஈரானுக்கே ஆதரவளிப்பதாக இன்னொரு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைப்பது இலங்கையின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.அத்துடன் இன்னும் ஒரு ஈரான் கடற்படைக்கப்பல் இலங்கை துறைமுகம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் இன்னொரு ஈரான் போர்க்கப்பல் சில மணிநேரம் இலங்கை துறைமுகத்தை பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் வெளிவரும் செய்திகளும் இலங்கையை மேலும்மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவருகின்றது.
கடும் விமர்சனங்கள் மூலம் தற்போதைய அநுரகுமார அரசை ஈரானுக்கு ஆதரவளிக்க வைத்து அமெரிக்காவுடன் பகைக்க வைப்பது , அவ்வாறு ஈரானுக்கு அநுரகுமார அரசு பகிரங்கமாக ஆதரவளிக்க மறுத்தால் அநுரகுமார அரசை அமெரிக்காவின் அடிமைகள் என முத்திரை குத்தி விமர்சிப்பதன மூலம் இலங்கை முஸ்லிம்களை அரசுக்கு எதிராக திருப்புவது என்ற இரு நோக்கங்களை நிறைவேற்ற இலங்கையின் எதிர்க்கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் போரைக் கையில் எடுத்துள்ளதாலும் போரில் ஈடுபடும் 3 நாடுகளும் இலங்கைக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடுகள் என்பதாலும் அநுரகுமார அரசு கொஞ்சம் திணறத்தான் செய்கின்றது.




















