LOADING

Type to search

இந்திய அரசியல்

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுனர் – வைகோ கண்டனம்

Share

ஆளுனர் மாளிகையின் அறிக்கை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

      மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுனர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார். பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுனருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாட வில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே கவர்னர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுனர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுனர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. மேலும், கவர்னர் மாளிகையின் அறிக்கை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுனரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும். அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுனர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து திமுக செயலாற்றும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.