LOADING

Type to search

இலங்கை அரசியல்

அவுஸ்த்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம், சட்டவிரோத பயணத்தை தடுப்பது தொடர்பில் ஆலோசனை

Share

நடராசா லோகதயாளன்

அவுஸ்த்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்த்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது.

இலங்கையில் அவுஸ்த்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வளம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்த்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளங்காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்த்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது அவுஸ்த்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென் ஆசிய மற்றும் இந்து சமுத்திரக் கடற் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும், அவுஸ்த்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்த்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்த்திரேலிய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்த்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியார் அடங்கியிருந்தனர்.

மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில், கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி கே. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சட்டவிரோதமான வகையில் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு எதிராக அவுஸ்த்திரேலிய அரசு இலங்கை உட்பட பல நாடுகளில் தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இலங்கையிலும் கூட வானொலி, தொலைக்காட்சி மூலமும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதற்கு அப்பால், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பெரியளவில் விளம்பரப் பதாதைகளும் வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறான விளம்பரங்களை வைப்பதற்கான கட்டணம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்கும் யாழ்ப்பாண மாநகராட்சிக்கும் இடையே முறுகள் நிலையும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது