இந்தியாவின் 15-வது துணை அதிபராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
Share
அதிபர் திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவின் 15-வது துணை அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வெற்றியை, தேர்தலை நடத்திய மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி இந்திய தேர்தல் கமிஷனுக்கும், இந்திய அரசின் சட்டத்துறைக்கும் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து துணை அதிபராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் கமிஷன் தயார் செய்தது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த சான்றிதழின் நகலை துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் யெதுரு மற்றும் செயலாளர் சுமன்குமார் தாஸ் ஆகியோர் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனிடம் வழங்கினர். இதில் உள்ள தகவல்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை அதிபராக பதவியேற்கும் விழாவில் வாசிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துணை அதிபர் பதவியேற்பு விழா, தலைநகர் டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் அதிபர் திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது துணை அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




















