இந்து சமுத்திரத்தில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கி ஈரான் கப்பலை தாக்கியது ஆதிக்கத்தை நிரூபிக்கவா?
Share
அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இந்து மா சமுத்திரப் பிராந்தியம்.

மீளவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி காட்டியிருக்கிறதா? அல்லது இந்தியாவிற்கு சவால் விட்டு காட்டியிருக்கிறதா அல்லது இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்த ஈரானிய கப்பலை மூழ்கடித்து இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறதா ?தானே ஒரு ஆதிக்க சக்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறதா?இந்த சம்பவத்தின் ஊடாக இந்தியா மற்றும் சீனா பிராந்திய பூகோள அரசியல் போட்டி எதிர்காலத்தில் எவ்வாறு அமையப்போகிறது என்பதை இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.
மார்ச் 4, 2026 அன்று இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையிலான பெண்டகனிலிருந்தும் இதுகுறித்த தகவல்கள் வெளியானதாக தெரிவிக்கப்பட்டது. தகவல்களின் படி, இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும்,அந்த தாக்குதலால் கப்பல் கடுமையாக சேதமடைது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அமெரிகாவின் பெண்டகனில் இருந்து அதிகாரபூர்வமாக கூறப்பட்டாது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஈரானிய மாலுமிகள் உயிரிழந்ததாகவும்,குறிப்பாக 32 ஈரானிய வீரர்களை இலங்கை ராணுவம் உயிருடன் மீட்டு காப்பாற்றியதாகவும், பின் நடைபெற்ற தேடுதலில் 80 சடலங்களை மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமுத்திரம் இந்தியாவின் தெற்குப் பகுதி பாதுகாப்பு வலயத்துடன் நெருங்கிய தொடர்புடைய கடற்பரப்பாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் அந்தப் பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்விகளை எழுப்புகிறதா? என்பதும் தற்போது விவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் இந்தப் பகுதியில் தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனுடன் தொடர்பாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பும் சர்வதேச அரசியலில் முக்கியமாக பேசப்படுகிறது. பிரேசில்,இந்தியா, ரஷ்யா, சீனா, தென்னாபிரிக்கா மற்றும் தற்போது இணைந்துள்ள ஈரான் போன்ற நாடுகள் இணைந்து செயல்படும் இந்த கூட்டமைப்பு, சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் குறித்து கருத்து பரிமாற்றங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த கூட்டமைப்பின் சமீபத்திய மாநாடுகள் தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த BRICS கூட்டமைப்பு எண்ணை வர்த்தகத்தை டொலருக்கு மாற்றீடாக BRICS நாணமொன்றூடா பரிமாற பெரும் முயற்சிகளை எடுத்து வந்திருந்தது.
ஈரான் மற்றும் இந்தியா நட்பு நாடுகளாகக் கருதப்படும் சூழலில், இந்திய அழைப்பின் பேரில் பயிற்சிக்காக வந்த பின் பயிற்சி நிறைவடைந்து ஈரானிய போர்க்கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அது பிப்ரவரி மாதத்தில் பெங்கால் வளைகுடாவில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டிருந்ததாகவும், பின்னர் ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பயணத்தின் போதே எந்த முன்னறிவுப்போ இன்றி திடீரென எங்கிருந்தோ கடலுக்கடியில் வந்ததாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதல் அந்தக் கப்பலை கடுமையாக சேதப்படுத்தி மூழ்கடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் இந்தியாவின் கடற்பாதுகாப்பு வலயத்திற்குள், இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுவதால் அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் போட்டி குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பாக இந்தியாவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது சக்தியை வெளிப்படுத்தியிருக்கிறதா என்ற கேள்வியும் தற்போது ஆய்வுக்குரியதாக மாறியுள்ளது.
இந்து சமுத்திரம், அல்லது இந்து பெருங்கடல் அதன் ஆதிக்க எல்லைகள் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்து நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பிராந்தியத்தின் கடற் பாதுகாப்பு யாரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது பற்றி பல போட்டிகள் இருந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக இலங்கையை மைய்யப்படுத்திய போகோள போட்டியே முதன்மை பெறுகிறது.
பொதுவாக,இந்து சமுத்திரம் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துடன் நெருங்கிய தொடர்புடைய கடற்பரப்பாகக் கருதப்படுகிறது. எனவே,அதன் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளதா அல்லது அதன் மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
2009க்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் இவ்வகையான சம்பவங்கள் பதிவாகவில்லை. இலங்கையை ஒட்டிய இந்திய தென் கடலோரம் விடுதலைபுலிகளின் கடற்படை பெரு வளர்ச்சி பெற்றிருந்த நேரத்தில் சீன ஆதிக்கமோ அல்லது அமெரிக்க ஆதிக்கமோ இன்றி மிக பாதுகாப்பாக இந்திய தென் கடலோரம் பாதுகாப்பாக இருந்தது. இந்தியாவுக்கு அது பாதுகாப்பாகவே இருந்தது. அக்காலகட்டத்தில் சர்வதேச கடற்படைகள் அந்தப் பகுதியில் போட்டியிட்டு ஆதிக்கம் செலுத்தும் நிலை அதிகமாக காணப்படவில்லை. ஆனால் 2009 க்கு பின் தற்போதைய நிலைமை மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்த்த ஆதிக்கத்துக்காக தான் பிராந்திய பூகோள நலன் சார் போட்டி ஆதிக்கத்திற்காக தான் விடுதலைப் புலிகள் வழித்து துடைக்கப்பட்டனரா என்ற வாதம் இன்றைக்கு எழுகிறது.
இன்றைய சூழலில் இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் பூகோள அரசியல் போட்டியில் மூன்று முக்கிய சக்திகள் அதிகம் பேசப்படுகின்றன. இந்தியா,சீனா மற்றும் அமெரிக்கா. இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல் பிராந்தியமும், இந்தியாவின் தெற்குப் பகுதியைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பும் இந்த மூன்று வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் முக்கிய மையமாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல் ஆதிக்கம், நிலப்பரப்பு செல்வாக்கு மற்றும் பூகோள அரசியல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இந்த மூன்று சக்திகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முன்னதாக நடைபெற்ற சில சம்பவங்களும் இந்த போட்டியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா புயலால் இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்தபோது,பல வல்லரசுகள் உடனடியாக உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. குறிப்பாக இந்தியா உடனடியாக களத்தில் நின்றது இராணுவ கப்பல் படை விமான படைகளை அனுப்பியது. போட்டிக்கு பாகிஸ்தான் விமானப்படை உதவி திட்டத்தோடு குதித்தது.
சீனாவும் உதவியை அறிவித்திருந்தாலும், நேரடியாக படைவீரர்களை அனுப்பி செயல்பட்டதாக குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவும் தனது இருப்பை வெளிப்படுத்தும் வகையில் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுருந்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுப் பின்னணியும் இங்கு பேசப்படுகிறது. இலங்கையில் இந்திய படைகளின் முன்னாள் தலையீடுகளுக்குப் பின்னர்,குறிப்பாக இலங்கை, இந்தியா ஒப்பந்தத்திற்குப் பிறகு வடக்கில் இந்திய ராணுவ சீருடையில் காணப்படும் நிலை இருந்திருக்கவில்லை. ஆனால் டித்வா புயலின் பின்னர், இந்திய ராணுவம் வடக்கு பகுதிகளில் குறிப்பாக பூநகரி போன்ற இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளில் இந்திய இராணுவ சீருடையோடு நின்றிருந்தன. அதன் மூலம் இந்திய படைகள் வடக்கில் மீள சீருடையோடு நிற்கிறார்கள் என்ற ஆதிக்க நிலையை மற்றைய சக்திகளுக்கு வெளிப்படுத்தும் நிலையேயாகும்.
இதை உன்னிப்பாக அவதானித்த அமெரிக்கா அதே நேரத்தில் தடால் புடாலாக பலாலி விமான நிலையத்தில் அமெரிக்க வான் படை விமானங்களை தரையிறக்கி அமெரிக்க படை சீருடையில் மனிதாபிமான உதவிகளாக உணவு மற்றும் பொருட்களை விநியோகித்தன.
இந்த நடவடிக்கைகள் வெறும் உதவி வழங்கல் மட்டுமல்லாமல்,அந்தப் பகுதியில் அமெரிக்காவின் இருப்பையும் கவனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகின்றன . அதாவது இந்திய படைகள் வடக்கில் சீருடையில் நிற்கும் போது நாம் வடக்கின் இதயம் யாழ்பாணத்தில் சீருடையுடன் நிற்கிறோம் என்ற செய்தியை வெளிப்படுத்தவேயாகும்.
இதன் மூலம், இலங்கை மற்றும் அதைச் சூழ்ந்துள்ள இந்துமா சமுத்திரப் பிராந்தியம் பல வல்லரசுகளின் கண்காணிப்பிலும் அரசியல் கவனத்திலும் இருந்து வருவது கண்கூடு. இந்த நிலைமை, அந்தப் பகுதியின் பாதுகாப்பு, கடற்பரப்பு ஆதிக்கம் மற்றும் பூகோள அரசியல் சமநிலையைப் பற்றிய புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இவை இவ்வாறிருக்க 04.03.2026 ஈரானிய கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி மூழ்கடித்தமை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதுவும் இலங்கையை ஒட்டியுள்ள பூகோள முக்கியத்துவம் வாந்த பிராந்தியத்தில் தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக அமெரிக்கா காட்டிக்கொண்டிருக்கிறதா! என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த கடல் பிராந்தியத்தின் கடல் சார் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்து சமுத்திரத்திலும் தன் செல்வாக்கு இருப்பதை மற்ற நாடுகளுக்கு முக்கியமாக இந்தியாவுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூட இருக்கலாம்.
ஈரான் மற்றும் இந்தியா நீண்ட காலமாக நட்பு நாடுகளாகக் கருதப்பட்டாலும், சமீபத்திய சர்வதேச அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்தியா சில சமயங்களில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குச் சென்ற பின்னர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்த சூழலில் இந்தியா ஈரானுடன் இருந்த உறவில் சற்று தள்ளி நின்று சூழ்நிலையை கவனித்து வருவதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அரசியல் பதற்ற சூழ்நிலையிலேயே ஈரானின் கடற்படை கப்பல் இந்தியாவில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தனது பயணத்தைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் இந்தியா, இலங்கை கடற்பரப்புகளுக்கு அருகில் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கடலுக்கடியில் இருந்ததாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,அதன் விளைவாக அந்தக் கப்பல் கடுமையாக சேதமடைந்து மூழ்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிற்கு அருகிலும், இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைகளுக்குள் உள்ள பிராந்தியத்திலும் நடைபெற்றதாக கூறப்படுவதால் அந்தப் பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறதா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் ஈரான் தொடர்பான சர்வதேச பதற்றத்தின் ஒரு பகுதியாக நடந்திருந்தாலும், அதன்மூலம் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கும் ஒரு அரசியல் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் மதிப்பிடுகின்றனர்.
அதாவது, இந்து சமுத்திரம் போன்ற முக்கிய கடல் பிராந்தியங்களில் அமெரிக்கா தொடர்ந்து வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கடலுக்கடியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் அந்தப் பகுதிகளை கவனித்து வருவதாகவும், அந்தப் பிராந்தியங்களில் தன்னுடைய செல்வாக்கு தொடர்ந்தும் இருப்பதை காட்டும் முயற்சியாகவும் இந்த சம்பவம் அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
ஈரானின் போர்க்கப்பல் தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், ஒரு தனிப்பட்ட ராணுவ தாக்குதல் செய்தியாக மட்டும் அல்லாமல் இந்தப் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் பூகோள அரசியல் போட்டியை மீண்டும் வெளிப்படுத்தியதாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள வல்லரசுகளின் போட்டி மற்றும் அதன் தாக்கங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், ஈரான் தொடர்பான பதற்றம் வெவ்வேறு பிராந்தியங்களுக்குத் திசைதிருப்பப்படக்கூடிய சாத்தியத்தையும் இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது எனவும் கூறப்படுகிறது. எனவே, இதை ஒரு தனிப்பட்ட ராணுவ நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல் பரந்த பூகோள அரசியல் சூழலில் இடம்பெறும் ஒரு நடவடிக்கையாகவும் ஆய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது.
இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள பூகோள அரசியல் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருவதை இது மீண்டும் நினைவூட்டுகிறது.
இந்நிலையில், தாக்குதலுக்குப் பின்னர் உயிர் தப்பியதாகக் கூறப்படும் 32 பேரை இலங்கை கடற்படை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர்,அந்த ஈரானிய படையினரை யார் பொறுப்பேற்கப் போகின்றனர் என்பது தொடர்பாகவும் சில அரசியல் மற்றும் இராஜதந்திர விவாதங்கள் எழலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரான் தூதரகம் அவர்களை பொறுப்பேற்குமா அல்லது இதைச் சுற்றி வேறு இராஜதந்திர சிக்கல்கள் உருவாகுமா என்பது பின்னர் தெளிவாகும் என பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இலங்கை ஒரு சிக்கலான அரசியல் நிலைக்கு தள்ளப்படக்கூடிய சாத்தியமும் இருப்பதாக சிலர் மதிப்பிடுகின்றனர். எனினும், இந்த சம்பவத்தின் முழுமையான விவரங்களும் அதன் பின்னணியும் தெளிவாக வெளிவந்த பிறகே அதன் தாக்கங்களை முழுமையாக ஆய்வு செய்ய முடியும்.
மொத்தத்தில், இலங்கையை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரப் பிராந்தியம் பல வல்லரசுகளின் பூகோள அரசியல் போட்டியின் முக்கிய மையமாக தொடர்ந்து உருவெடுத்து வருவதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கடல் பிராந்தியத்தின் ஆதிக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான போட்டி பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது என்பதையும் இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
கு.மதுசுதன்
B.Sc(Hons), M.Sc
அரசியல் ஆய்வாளர்




















