LOADING

Type to search

இந்திய அரசியல்

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் – துணை முதல்-அமைச்சர் உதயநிதி மலர் தூவி மரியாதை

Share

பரமக்குடி நகராட்சி பகுதியில் நினைவு மண்டபம் கட்டும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

      தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.9.2025) ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பத்திரிக்கை நண்பர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நம்முடைய சுதந்திர போராட்ட தியாகி, இந்தியாவிற்காக ராணுவத்தில் பாடுபட்டவர். சமூக நீதி போராளி. மறைந்த ஐயா இமானுவேல் சேகரனாருடைய 68 வது நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பாக நானும், கழகத்தினுடைய மூத்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் வந்து இங்கே எங்களுடைய மரியாதையை நாங்கள் செலுத்தியுள்ளோம். அவருடைய புகழ் என்றென்னும் ஓங்கி நிற்கட்டும். சமூக நீதிக்காக அரும்பாடு பட்டவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் இமானுவேல் சேகரனார். அவருடைய குடும்பத்தினர் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், சிலை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார்கள். சென்ற வருடமே நம்முடைய முதல்-அமைச்சர் அதற்கான உத்தரவையிட்டார்கள். உடனடியாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். பரமக்குடி நகராட்சி பகுதியில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணி கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் நடைபெற்று வருகின்றது. மணிமண்டபம் உள்ளே அவருடைய திருவுருவச் சிலை வைக்கின்ற இறுதிகட்டப் பணி நடைபெற்று வருகின்றது. இன்னும் 2 மாதங்களில் மணிமண்டபமும், சிலையும் திறக்கப்படும் என்ற செய்தியை நான் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சுதந்திர பேராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் புகழ் ஓங்கட்டும். அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கும் அவருடைய சமூக நீதி பணி, அவருடைய பெருமைகள் கொண்டு சேர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.