இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Share
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்); வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்); தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும் மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்; போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர், 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதல்-அமைச்சர், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், முதல்-அமைச்சர் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.




















