LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் அண்மைய பேரழிவு காலத்தில் பொலிஸ் காவலிலிருந்த ஒரு நபர் மரணம்!

Share

கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதே நாளில், தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக, தனது புதல்வர் தன்னிடம் கூறியதாக தாய் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு, சின்ன உப்போடையைச் சேர்ந்த 23 வயது சிவநேசராசா ரினோசன், பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியைத் திருடிய குற்றச்சாட்டில், டிசம்பர் 2, 2025 அன்று மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 3 ஆம் திகதி அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரினோசன், டிசம்பர் 5 ஆம் திகதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக டிசம்பர் 7 ஆம் திகதி பொலிஸாரால் ரினோசனின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய தினம், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்பாக கூடிய ரினோசனின் உறவினர்கள், பொலிஸார் தமது உறவினரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறி, பொலிஸாரக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனது மகன் கைது செய்யப்பட்ட டிசம்பர் 2 ஆம் திகதி இரவு, அவருக்கு உணவு கொண்டுச் சென்றதாகவும், தன்னை பொலிஸார் தாக்கியதாக, இதன்போது தனது மகன் தன்னிடம் தெரிவித்ததாகவும், உயிரிழந்த இளைஞரின் தாய் குறிப்பிடுகின்றார்.

“என்னுடைய பிள்ளைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். எந்த காரணத்திற்காக கைது செய்தாலும் அடிக்கக்கூடாது. என்னுடைய பிள்ளையை கொலை செய்துவிட்டார்களே. நான் இரவு 7 மணிக்கு நான் இட்லி கொண்டுச் சென்று கொடுத்தேன். என்னை அடிக்கின்றார்கள் என்னை வெளியில் எடுங்கள் எனச் சொன்னான்.”

டிசம்பர் 3 ஆம் திகதி காலை, ரினோசன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் உணர்வின்றி காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“மறுநாள் காலையில் நான் பார்த்தபோது அவன் உணர்வின்றி இருந்தான். உடைகள் மாற்றும்போது தட்டிப் பார்த்தேன். தட்ட வேண்டாமென கூறினார்கள்.”

இலங்கை பொலிஸார் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் காவலில் இருந்தவர்களை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ரினோசனின் பொலிஸ் காவல் மரணம் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சோ அல்லது பொலிஸோ உத்தியோகபூர்வமாக எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.