LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணை வீச்சு

Share

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் நடத்தியது. இதற்கிடையே நேற்று ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலின் உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற எண்ணெய் வளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேலின் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் 3-வது பெரிய நகரமான ஹைபாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது. அதை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கடும் புகைமூட்டம் எழும்பியது. தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். தாக்குதல் காரணமாக அங்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஹைபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இஸ்ரேலின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகும். இஸ்ரேலின் உள்நாட்டு எரிபொருள் தேவைகளில் சுமார் 50 முதல் 60 சதவிதம் வரை இந்த நிலையம் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இஸ்ரேலின் தெற்கில் உள்ள அஷ்டோட் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அங்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 21-வது நாளை எட்டியுள்ள இப்போரில் ஈரான் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தலைநகர் தெக்ரான் முழுவதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோல் வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதலை ஈரான் தொடர்ந்தது. சவுதி அரேபியாவில் சுல்தான் விமானப்படை தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. குவைத்தில் உள்ள மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் மீது டிரோன்கள் ஏவப்பட்டன.