உங்களை சிரிக்க, சிந்திக்க வைக்கிற படமாக “மை லார்ட்” இருக்கும் – நடிகர் சசிகுமார்
Share
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி, உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சசிகுமார் பேசும்போது, “ ‘மை லார்ட்’ படம் நீதிமன்றத்தை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் நீதிமன்ற காட்சிகள் பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கடைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழுசுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்” என்றார்.




















