LOADING

Type to search

இலங்கை அரசியல்

உயர்ஸ்தானிகரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தவும்:- சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

Share

மன்னார் நிருபர்
(12-12-2023)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்க அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இந்திய தூதரகத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்..பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

அவருடனான சந்திப்பு ஒன்றுக்கு ஏற்கெனவே இணங்கியதற்கு அமையவே விரைவில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்தியாவின் கடல், இலங்கையின் கடல் இரண்டும் சரியான நேர் சீர் இல்லாததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசம் ,மன்னார் , கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ,திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற மீனவர்கள் குறிப்பாக இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறிய மீன்பிடி, எமது மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தல், வளங்களை அழிப்பதும் நீண்டகாலமாக தொடர்கின்றது.

இது தொடர்பாக கடந்த வாரம் கடற்தொழில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் ஆளும்,எதிர்க்கட்சி எம்.பிக்களினால் இவ்விடயம் தொடர்பில் இந்திய தூதுவருடன் தூதரகத்திலோ அவரை பாராளுமனற கட்டிடத்துக்கு அழைத்தோ சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரப்பட்டது .

அதற்கு அமைச்சும் இணங்கியது.எனவே அந்த சந்தர்ப்பத்தை அமைச்சு விரைவாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.