LOADING

Type to search

உலக அரசியல்

எங்களுக்கு பிரிக்ஸ் ஆதரவு உள்ளது – அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி

Share

உலகின் ஏழை நாடுகள், பிரிக்ஸ் அமைப்பு கூட்டாளிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்,” என வரி மூலம் மிரட்டல் விடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளார். இன்னும் வரி விதிக்கப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, தடைகளும் கட்டுப்பாடுகளும் தற்போதைய வரலாற்று காலகட்டத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாக மாறிவிட்டன. இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கம் வீழ்ந்துவருவதை பொறுக்க முடியாத அமெரிக்கா, ஒரு புதிய காலனித்துவ கொள்கையை பின்பற்றுகிறது. சர்வதேச அரங்கில் சுதந்திரமான பாதையை தேர்வு செய்பவர்களுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை பயன்படுத்துகிறது. ரஷ்ய நட்பு நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பது என்பது, இறையாண்மை மிக்க நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்பது ஆகும். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமம். எந்தவொரு வரிப் போர்களோ அல்லது தடைகளோ வரலாற்றின் இயல்பான போக்கைத் தடுக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குறிப்பாக குளோபல் சவுத் எனப்படும் ஏழை நாடுகள், பிரிக்ஸ் நாடுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. மந்தமான பொருளாதார வளர்ச்சி கொண்ட அமெரிக்காவால், விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளே ஊக்குவித்த தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக, அரசியல் ரீதியாக வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.