எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞரின் மரியாதையை பெற்றவர்- ஏ.வி.எம்.சரவணன் விழாவில் ரஜினி பேச்சு
Share
சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது: ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம். எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது. மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.
சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார். என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம். எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.
சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது. ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.
அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர். காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.




















