LOADING

Type to search

இலங்கை அரசியல்

”ஒப்பரேஷன் மிஸ்டர் கிளீன்” பழிவாங்கலா …மிரட்டலா?

Share

”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் மூலம் அநுர அரசு எதனை சாதிக்கப் பார்க்கின்றது?இந்த கைது அநுர அரசுக்கு சாதமாக அமையுமா பாதகமாக அமையுமா? ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய வேண்டிய அவசியம் ,அவசரம் அநுர அரசுக்கு ஏன் ஏற்பட்டது?”

கே.பாலா

இலங்கையில் 1993 மே 17முதல் 2022 ஜூலை 22 வரையிலான காலப்பகுதியில் 6 தடவைகள் பிரதமராகவும் 20 ஜூலை 2022 முதல் 22 செப்டெம்பர் 2024 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்த ”மிஸ்டர் கிளீன்”என சிங்களவர்களினாலும் ”அரசியல் நரி”என தமிழர்களினாலும் இலங்கையின் முதல்தர, பிரபல்யம் மிக்க அரசியல் தலைவராக சர்வதேசத்தினாலும் அழைக்கப்பட்டு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி .அரசினால் கைது செய்யப்பட்டமை இலங்கையில் அரசியல் சுனாமியை ஏற்படுத்தி விட்டுள்ளது.

1988/1989ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் ஐக்கியதேசியக்கட்சியின் ஆட்சியில் பட்டலந்த வீட்டுத்தொகுதியில் செயற்பட்ட பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி,மத்தியவங்கி பிணைமுறி மோசடி,உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் போன்றவற்றில் தொடர்புபட்டவர் என்ற குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அநுரகுமார அரசினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்படாமல் ”ஒரு கோடி 66 இலட்சம் ரூபா அரச பணத்தை தவறா க பயன்படுத்தினார்”என்ற சிறிய குற்றச்சாட்டில் கைதானமைதான் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் முதல்தர அரசியல்வாதி. புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக இலங்கைப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அரசியல்வாதி. தனது அரசியல் வாழ்வில் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுக்குள்ளானாலும் ஊழல் மோசடிக் குற்றச் சாட்டுக்களில் சிக்காதவர் .மத்திய வங்கி பிணை முறி மோசடியில் சிக்க வைக்கப்பட்டாலும் குற்றம் நிரூபிக்கப்படாதவர்.அதனால்தான் அவரை அரசியல் எதிரிகள் கூட ”மிஸ்டர் கிளீன்”என அழைப்பர். அவ்வாறான மிஸ்டர் கிளீன்”ஆன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தற்போதைய ஜனாதிபதியான ”மிஸ்டர் ஏகேடி” (Anura Kumara Disanayakka-AKD) அதிரடியாக கைது செய்தது ஏன்?

 

1988/1989ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் ஐக்கியதேசியக்கட்சியின் ஆட்சியில் பட்டலந்த வீட்டுத்தொகுதியில் செயற்பட்ட பட்டலந்த வதைமுகாமில் வைத்து தமது தோழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டமை ,காணாமலாக்கப்பட்டமை போன்றவற்றிற்கு பழி தீர்க்கவே அது தொடர்பில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தற்போது ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு கைது செய்து பழி தீர்த்துள்ளது என ஒரு சாராரும் தமது சரிந்துபோகும் மக்கள் ஆதரவை தூக்கி நிறுத்த ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட தாக இன்னொரு சாராரும் கூறிவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதின் பின்னால் ”மிரட்டல் அரசியல்”உள்ளதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் மூலம் அநுர அரசு யாரை மிரட்டப் பார்க்கின்றது?எதற்காக மிரட்டப் பார்க்கின்றது?இந்த மிரட்டல் கைது மூலம் அநுர அரசு எதனை சாதிக்கப் பார்க்கின்றது?இந்த மிரட்டல் கைது அநுர அரசுக்கு சாதமாக அமையுமா பாதகமாக அமையுமா? ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து மிரட்ட வேண்டிய அவசியம் ,அவசரம் அநுர அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் பார்ப்போம்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா மை ,மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தாமை ,புதிய திசையில் பயணிக்காமை , ஜே .வி.பி.-என்.பி.பி. கூட்டு அரசுக்குள் பிரதமர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அமைச்சர்கள் சிலரின் கோமாளித்தன செயற்படுகள்,கருத்துக்கள்,சில அமைச்சர்கள் மீதான ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டுக்கள்,அவ்வாறானவர்களை பாதுகாக்கும் அரசின் செயற்பாடுகள் .இன்னும் சில அமைச்சர்களின் வீராப்பு ,தலைக்கன பேச்சுக்கள்,நடவடிக்கைகள்,ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல்களினால் அநுர அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கை தினமும் சரிந்து செல்கின்றது.

அதுமட்டுமன்றி சிவப்பு சட்டைக்காரர்களான அநுரகுமார அரசின் சீன சார்புக்கொள்கையும் சீன ஆதரவுப் போக்கும் சீனாவுக்கான முக்கியத்துவமளிப்பும் அமெரிக்க ,இந்திய நாடுகளை சீற்றம் கொள்ள வைத்துள்ளதனால் அநுரகுமார அரசுக்கான மறைமுக அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் ராஜபக்சக்களுடனும் அண்மையில் நடத்திய சந்திப்புக்கள், ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசுடன் காட்டி வரும் நெருக்கம் ,நாட்டில் மீண்டும் ராஜபக்சக்களுக்கு அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு என்பன புலனாய்வுத்துறையினரால் அநுர அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுமட்டுமன்றி அண்மையில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகக்கொண்டுவர வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தவருமான பிரசன்ன ரணதுங்கவின் மகளின் திருமணத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க,மஹிந்த ராஜபக்ச ,கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தனிமையில் நீண்ட நேரம் நடத்திய கலந்துரையாடல், அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இரகசிய சந்திப்பொன்றில் ”அவர்களை (ஜே .வி.பி.-என்.பி.பி.) ஒரு வருடம் ஆட்சி செய்ய விடுங்கள்.அதன் பின்னர் என்ன செய்ய வேண்டுமென நான் உங்களுக்கு கூறுவேன்”என ரணில் கூறிய விடயமும் அநுர அரசின் காதுகளுக்கு எட்டியது.

இவ்வாறான நிலையில்தான் நாட்டில் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான திரைமறைவு வேலைகள் அமெரிக்க ,இந்திய பின்புலத்துடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ராஜபக்சக்களின் ஆதரவுடன் முன்னெடுப்படுவதாக அறிந்து சுதாரித்துக் கொண்ட அநுர அரசு இந்த முயற்சியை முளையிலேயே கலைத்துவிட, அழித்துவிட என்ன செய்யலாம் என நன்கு சிந்தித்து எடுத்த முடிவே ”ஒபரேஷன் மிஸ்டர் கிளீன்”என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை.இதற்கு பட்டலந்த வதைமுகாம் ,மத்தியவங்கி பிணை முறி மோசடி,உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் உடனடியாக கை கொடுக்காது என்பதாலேயே ”ஒரு கோடி 66 இலட்சம் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தினார்”என்ற சிறிய குற்றச்சாட்டை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து அநுர அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அநுர அரசு ஊழல்,மோசடி பெருச்சாளிகளான ராஜபக்சக்களை கைது செய்யாமல் ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்ததற்கு ரணில் விக்கிரமசிங்கவின் ”சாணக்கிய அரசியல்”மீதான அச்சமே பிரதான காரணம் . அநுர அரசைப் பொறுத்த வரையில் ராஜபக்சக்கள் அவர்களுக்கு ஒரு சவால் அல்ல. ராஜபக்சக்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்,வழக்குகள் உள்ளதால் எந்த நேரம் விரும்பினாலும் அவர்களை உள்ளே தள்ளிவிட முடியும். அவர்கள் அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு சட்ட ரீதியாக பதிலடி கொடுக்கும் திட்டத்திலேயே அநுர அரசு அனைத்து வழக்குகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இது ராஜபக்சக்களுக்கும் நன்கு தெரியும். அதனால் அவர்கள் ராஜபக்சக்களாக ஆட்சிமாற்ற சூழ்ச்சிகளில் ஈடுபடமாட்டார்கள்.

ஆனால் ”அரசியலில் நரி”யான ரணில் விக்கிரமசிங்க சதிகள் ,சூழ்ச்சிகள் .ஆட்சிமாற்றங்களில் பழம் தின்று கொட்டைபோட்டவர். நோகாமல் நொங்கு எடுப்பதில் வல்லவர்.அதனால்தான் கோத்தபாய ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்ட ஒரு தரப்பினர் உயிரைப் பணயம் வைத்து போராடியபோதும் அந்தப்போராட்டத்தை பயன்படுத்தி தனது நிறைவேறாத ஆசையான ஜனாதிபதி பதவியை ”தனி ஒருவன்”ஆக அலங்கரித்தவர். அதனால்தான் ரணில் எப்போதும் தமது ஆட்சிக்கு ஆபத்தானவர் என்பதனை அநுர அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. அதனால்தான் தமது ஆட்சியை பாதுகாக்க முதலில் ரணிலை களையெடுத்து அதன் மூலம் ராஜபக்சக்களை அச்சுறுத்தவும் மிரட்டல் அரசியலை கையில் எடுத்தது.

யார் ஆட்சி பீடம் ஏறினாலும் சட்ட ரீதியாக ரணில் விக்கிரமசிங்கவை தொட முடியாது என்ற விம்பத்தை உடைக்கவும் அதன் மூலம் ரணிலுக்கு இந்த நிலை என்றால் நமது நிலை என்னவென ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சியினரை நடுங்க வைக்கவுமே முதல் அடியாக, தலை அடியாக அநுர அரசு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து உள்ளே தூக்கி போட்டு இலங்கை அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தக் கைது அநுர அரசு எதிர் பார்த்த மாதிரியே எதிர்கட்சியினரை கலங்க வைத்தாலும் அரசியலில் நரியான ரணில் விக்கிரமசிங்க கனவிலும் நினைத்துப்பார்க்காத அவமானத்தை அநுர அரசு ஏற்படுத்தியுள்ளதால் தற்போது ”அடிபட்ட பாம்பாக”மாறியுள்ள ரணில் அநுர அரசை பழிதீர்க்க துடிப்பார். எனவே அநுர அரசுக்கும் இனிவரும்காலம் அரசியல் சவால்கள் மிக்கதாகவே இருக்கப்போகின்றது என்றும் குறிப்பிடலாம்.