LOADING

Type to search

இந்திய அரசியல்

ஓசூரில் விரைவில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Share

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்ததுடன் அங்குள்ள தமிழர்களை சந்தித்தும் கலந்துரையாடினார். இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக காலை 8.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் திரளாக வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். அதன் பிறகு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒருவார காலமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பயணத்தை நான் மேற்கொண்டேன். மனநிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன். இந்த பயணத்தை பொறுத்தவரை மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்து இருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஏற்கனவே இருக்கக் கூடிய 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி போகாமல், நம்முடைய மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். எனக்கு முன்னாடியே நான் புறப்படுவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்னாடியே என்னுடைய ஒட்டு மொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைத்து, அந்த பணியை வெற்றிக்கரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். தொழில்துறை அமைச்சரை பொறுத்தவரை, ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக ராஜா இந்த பயணத்தின் மூலமாக நிரூபித்து உள்ளார். கடந்த 4½ ஆண்டு காலத்தில் மேற்கொண்டிருக்கக் கூடிய எனது பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வெளிநாட்டு பயணத்தில்தான், மிக அதிக அளவிலான, முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். 

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் இன்று 8-ந்தேதி நான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து இன்னும் 2 நாளில் 11-ந்தேதி ஓசூருக்கு போகிறேன். அங்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டமெட்டல்லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து ரூ.1100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன். அதே மாதிரி ஏற்கனவே தூத்துக்குடியில் நடத்தியது மாதிரி ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த போகிறோம். அங்கேயும் பல ஆயிரம் கோடி முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்களது வெளிநாட்டு பயணங்களும், இங்கே மேற்கொள்ளும் பயணங்களும் எப்போதும் நிற்காது. இது தொடரும், தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.