ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணை – மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Share
பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கிட 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். பத்திரிகையாளர்கள் அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணத்திற்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 125 பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், 27 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இவ்வரசு பொறுப்பேற்றப்பின்னர் 59 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு 2 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர், செய்தியாளர், பிழை திருத்துநர் ஆகியோர் பணிக்காலத்தில் இயற்கை எய்த நேரிட்டால் அவர்கள் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.1.25 லட்சம் என்பதை ரூ.2.50 லட்சமாகவும், ரூ.2.50 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாகவும், ரூ.3.75 லட்சம் என்பதை ரூ.7.50 லட்சமாகவும், ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாகவும் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2,00,000/-லிருந்து ரூ.2,50,000/-ஆக 19.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு 30 லட்சத்து 61 ஆயிரத்து 339 ரூபாய் மருத்துவ உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்குத் திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கிட 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கும் தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் ச.செல்வராஜ், ஆர். பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















