LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா மேடையில் தோன்றிய “யாழ் நூலகம் காகிதத் தாய்களின் ஆலயம்”

Share

டாக்டர் போல் ஜோசேப் – கனடா

44 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அதிகாலைப் பொழுதில் உலகத் தமிழினமே ஏக்கத்தில் உறைந்து போனது. வானொலி செய்திகள் பத்திரிகைச் செய்திகள் என எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக வந்து நம் உள்ளத்தை ஊடறுத்து இதயங்கள் சற்று அதிர்ந்து நின்று மீண்டும் துடித்த அந்த கணப் பொழுதுகள் இன்னும் என்றும் பலரின் நீங்கா நினைவுகளில். அதற்கு முன் இரவு வைகாசி 31, 1981

அதிகாலை ஒலிகளுக்கு பதிலாய் ஒப்பாரி கேட்கிறது

அமைதி பொங்கும் இராப் பொழுதில் என்ன நிகழ்ந்திருக்கும்?

எங்கும் ஏக்ககப் பெருமூச்சுகள்…

ஈழ தேசமே ஏன் இந்த நிசப்தம்

யாழ்ப்பாண பெருநகரே! ஏன் இந்த மௌனம்?

ஓ எங்களின் அறிவு கருவூலம் தீக்குளித்து விட்டதா

எம்மண்ணின் அறிவு களஞ்சியம் புகை கக்கிக் கிடக்கிறதே.

கடவுளே! வாரி இறைக்கப்பட்ட வக்கிரத்தின் வடுக்கள்

கோரமாய் தெரிகின்றன நாம் கோலமிட்ட இடமெல்லாம்.

கம்பீர தோற்றம் கரைந்து கரும்புகையாக காட்சி தருகிறது….

இப்படி, உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களின் கண்ணீர் எழுதிய வரிகளுக்கு அவரின் வாரிசு நடன ஆசிரியை ஜனனி ரவிசங்கர் தன் நடன உடல் மொழியால் மௌனமாய் பேசிய ஒவ்வொரு அசைவுக்கும் பார்வையாளர்களின் கண்களில் வழிந்த துளிகளால் ஒரு குட்டி நாயகராக்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஆம் கடந்த மே 17 அன்று கனடாவின் விற்பி நகரின் கலையரங்கில் நடன ஆசிரியையும் வங்கி அதிகாரியுமான திருமதி ஜனனி ரவிசங்கர் அவர்களின்

சக்தி நர்த்தனாலையா வழங்கிய ‘நாட்டிய மாலிகா’ எனும் நிகழ்வில், அவரும் அவரின் மாணவிகளும் பக்தி இலக்கியங்கள் முதல் சங்க இலக்கியங்கள் வரையும் காவடிச்சிந்தெனும் ஆற்றுப்படுத்தும் கலை தொடங்கி தில்லானா வரை பல்வேறு நடனக்காட்சிப்படுத்தல் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

நிகழ்வின் நடுவில் யாழ் நூலக எரிப்பின் நினைவாக ஜனனியின் தலைமையில் காட்சிப்படுத்தலோடு மேடையின் திரையில் நூலகத்தின் வரலாறு சித்தரிக்கப்பட அதற்கான நடன உத்திகள் சக்தி நர்த்தனாலையா மாணவிகள் வெளிப்படுத்த அரங்கமே சில மணித்துளிகள் கண்கள் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடி நூறாயிரம் காகிதத் தாய்களை அரவணைத்து வைத்திருந்த அந்த அறிவு திருக்கோவிலை சிங்கள அரசை பயங்கரவாதம் எரித்த நினைவுகளுக்குள்ளே மூழ்கிப்போயிருந்தனர்.

திட்டமிட்ட இனவழிப்பின் ஒருமுகம் இனப்படுகொலை, இன்னொரு முகம் அறிவுப் படுகொலை. இனவாதிகள் எண்ணினர் நூல்களைக் கருக்கினால் அறிவுத் தமிழனின் மூளையையும் கருக்கி பொசிக்கி விடலாமென்று. அறிவில் சிறந்த ஈழ இனத்தை புத்திப் படுகொலை செய்ய சிங்கள தேசம் முயன்ற புதிய யுக்தியிது.

அந்த நள்ளிரவு நானும் நாலு நண்பர்களும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி விடுதியில் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்தோம். ஜன்னல் வழியே செந்நிற வானம் போலத் தோன்ற ஏதோ தொலைவில் எரிகிறது என்று உணர்ந்து, அதிபரின் அறைக்குச் சென்று (அன்று அதிபராக இருந்தவர் முள்ளி வாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவரான அருட்தந்தை மைக்கேல் பிரான்சிஸ் ஜோசப்) அவரிடம் சொன்னோம் உடனே காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, நூல்நிலையம் எரிகிறது ஃபாதர் என்று பதில் வந்தது. அவரின் அடுத்த அறையில் தன் ஓய்வு காலத்தினை தமிழ் ஆய்வுகளில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அருட்தந்தை கலாநிதி டேவிட் அடிகளார், பன்மொழி வித்தகரான பல டாக்டர் பட்டங்களுக்கு சொந்தக்காரர் உறங்கிக் கொண்டிருந்தார். எழுப்பி தகவலைச் சொன்னபோது பலத்த சத்தத்தோடு கதறிக்கத்தி அழுதார். அவரின் பல ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவேற உதவியது அந்த நூலகம் தான். மார்பை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்தார், மயக்கமான அவரை நாங்கள் படுக்க வைத்து விட்டு, அதிபர் மருத்துவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார், சற்று நேரத்தில் மருத்துவரும் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அன்றிரவே மரணத்திற்குள் அமைதியானார். அவரின் அந்த கதறல்கள் இன்னும் என் காதுகளில் அந்த நினைவுகள் வரும்போது எல்லாம் மறையாது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

காலையில் வீதியெங்கும் ராணுவ வாகனங்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டமாக யாத்திரை செல்வது போல நூலகம் எனும் ஆலயம் நோக்கி சென்ற மக்களோடு நாங்களும் சென்றோம். எங்கும் ஒரே கரும் புகைமண்டலம், இனவாதம் எனும் நெருப்பினால் கருகிய தூண்களோடு அறிவு பசிதீர்த்த வெண்மாளிகை அரை நூற்றாண்டு வயதை அண்மித்த போது இனவெறிப் பசிக்கு இரையாகி இனத்தின் அடையாளங்களின் அழியா வரலாற்று அரிய ஆவணங்கள் அத்தனையும் அழித்துவிட்ட அழியாத காயங்கள் ஆறப்போவதில்லை. எதையும் மன்னிக்கச் சொன்னார் இயேசு, ஆனால் மன்னிக்க மனம் மறுக்கிறது பாவிகளை மன்னிக்கலாம், சாத்தான்களை எப்படி மன்னிப்பது. கவிஞர் லோகேந்திரலிங்கம் அவர்களின் தொடரும் கவிதை வரிகளோடு என் கருத்தினை நிறைவு செய்கிறேன்.

நேற்றல்லவா இங்கு கூடி வந்து

அரிய நூல்களின் வாசனையை நுகர்ந்து சென்றோம்,

அறிவைச் சுமந்தவர்களாய் மிடுக்குடன் விடேகினோம்.

இன்று எப்படி ஈழத்தவர் அறிவுச்சுடர் மரணப்படுக்கையில்

கல்விமான்களை உற்பவித்த

தாயின் கருப்பையை சிதைத்தனர் சிங்களக் காடையர்கள்.

எங்கள் படிப்பின் பலம் எதுவென்று தேடி

அதற்குள்ளே கொள்ளி வைத்தனர்.

காலங்கள் கடந்த பல சித்தாந்தங்களை

தேடி வைத்திருந்த இடம் அல்லவா அது

எங்களின் வரலாறுகள் இங்குதானே பதிவாகி கிடந்தன,

அரச பயங்கரவாதிகளின் இனவாதப் பசிக்கு

இரையாகியதோ எங்கள் அறிவாலயம்.

காலணிகளை கழட்டி வைத்து விட்டல்லவா

இந்த கலைமகளை உடசென்று தரிசிப்போம்.

அதோ பாருங்கள் வெண்மையும் கருமையுமாய்

வானை நோக்கி புகை கூட்டங்கள் சூரிய சந்திரர்களின்

காதுகளில் சேர்ப்பதற்காய் போலும்,

ஐம்பதுகளிலிருந்து நேற்று வரை

அழகாய் எழுந்த நூலகம்

இன்று தீக்கிரையாகி,

நூறாயிரம் நூல்களும் சாம்பலாகிப் போயினவே.

ஏரிப்பின் எதிரொலி ஊரெங்கும் கேட்கிறது,

கல்விமான் தாவீது அடிகளின் இதயத்துடிப்பை

நிறுத்திய கொடுமை இது.

மீண்டும் இதே கொடுமை நிகழாதிருக்கட்டும்! நிகழாதிருக்கட்டும்.!