LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரள மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்’ – ராகுல் காந்தி

Share

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில், கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கேரளாவின் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கு முன்னர் அவர் குத்துப்பரம்பா தொகுதியில் மூன்று முறையும், பையனூரில் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தார். தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வி.பி.அப்துல் ரஷீத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. கே.ரஞ்சித்தை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 92 வேட்பாளர்களும், மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நேற்றையை தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 92 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கேரள மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “ஐக்கிய ஜனநாயக முன்னணி அணி என்பது கேரள அணி. இந்த கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரும் கேரள மக்களின் குரலையும், விருப்பங்களையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறார். இது அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் இளைஞர்களின் கூட்டணி. தங்களது தொகுதிகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்ட வேட்பாளர்களைக் கொண்ட ஒரு வலிமையான அணி. எனக்கு, கேரளம் என் வீடு, கேரள மக்கள் என் குடும்பம். அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்திற்கும், அவர்கள் எனக்கு காட்டிய அன்புக்கும், அரவணைப்புக்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். நான் எப்போதும் உங்கள் கூட்டாளியாக இருப்பேன். கேரளாவின் செய்தி மிகத் தெளிவாக உள்ளது – மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். அவர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, பிரச்சினைகளை புரிந்துகொண்டு, நேர்மையுடன் செயல்படும் ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார்கள். வரவிருக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து, இந்த அழகான மாநிலத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுவதற்காக நான் அனைத்தையும் செய்வேன். கேரளம் வெல்லும். ஐக்கிய ஜனநாயக முன்னணி வழிநடத்தும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.