LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

Share

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தடை விதித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் இருந்து ஆசியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லுதல், சர்வதேச வணிகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் தடுத்தால் அந்நாட்டின் மீது 20 மடங்கு கூடுதல் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், போரில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கூறியுள்ள ஈரான் இந்த போரை எப்போது நிறுத்துவது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் எண்ணெய் வயல் பகுதியை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் சவுதியின் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல், குவைத் நாட்டின் வடக்கு,தெற்கு பகுதிகளை குறிவைத்து 6 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களும் குவைத் வான்பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.