சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிற்கு மறைந்த துணைவியாரின் 108 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை காணிக்கையாக வழங்கிய கனடா கணேசன் சுகுமார் அவர்கள்!
Share
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம்: Shri Chidambaram Natarajar Temple பொற்சபையில் ஸ்ரீ நடராஜருடன் இருக்கும் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மனுக்கு கனடாவைச் சேர்ந்த திரு. கணேசன் சுகுமார் 5ம் திகதி வியாழக்கிழமை அன்று 108 கிராம் எடையுள்ள தங்க ஆரத்தை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார்.
இந்த தங்க ஆரம் , மறைந்த அவரது மனைவி ஷீலா சுகுமார் அவர்களின் தாலி சங்கிலியில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். தாம்பத்ய பந்தத்தின் புனிதச் சின்னமான தாலியை, இறைத் திருவடிகளில் அர்ப்பணித்த இந்த நிகழ்வு, பக்தர்கள் மற்றும் ஆலயத்திற்கு வந்திருந்தோரிடையே ஆழ்ந்த உணர்வையும் ஆன்மிக நெகிழ்வையும் ஏற்படுத்தியது.

தனிப்பட்ட துயரத்தை தெய்வீக சேவையாக மாற்றிய இந்த காணிக்கை, இறைநம்பிக்கை, அன்பு மற்றும் நினைவுகளின் நித்திய அடையாளமாக விளங்குகிறது. இந்த புனித காணிக்கையை சிவகாம சுந்தரி அம்மன் அருளுடன் ஏற்று, குடும்பத்தினருக்கும் உலக மக்களுக்கும் அருள், அமைதி மற்றும் நல்வாழ்வு வழங்க வேண்டுமென ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர் .
சமூக மற்றும் ஆன்மீக நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் அதிகளிவில் நன்கொடைகளும் கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை உபகரணங்களும் வழங்கி அறத்தின் அடையாளமாக விளங்கும் கனடா வாழ் கணேசன் சுகுமார் அவர்கள் – சில ஆண்டுகளுக்கு முன்னே ஆனந்த நடராஜ மூர்த்திக்கு தங்க பதக்கம் ஒன்றை காணிக்கையாக கொடுத்து உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்த்ககது..




















