சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன என்கின்றார் சுமந்திரன்!
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு நிறைவடைந்த பின்னர், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஆ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு 12ம் திகதி அன்றையதினம் நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான திருமதி ம.மதிவதனி, திரு இமானுவேல் தயாளன் ஆகிய இருவரும் முறையே முதல்வர், பிரதி முதல்வராக, பகிரங்க வாக்கெடுப்பின்மூலம் 19:16 என்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். யாழ். மாநகர சபையில் கூடுதலான ஆசனங்களை இலங்கை தமிழரசு கட்சி பெற்றமைக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
எந்தெந்த சபைகளிலே எவரெவர் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ளார்களோ அவர்கள் அந்த சபை நிர்வாகத்தை அமைப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறியுள்ளோம். அந்த கோட்பாட்டுக்கு அமைவாக அன்றைய தெரிவு இடம்பெற்றிருக்கிறது.
இந்த கோட்பாட்டையே வேறு சில கட்சிகளும் வலியுறுத்தி தாங்களும் சொல்லியதுடன் எங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தாங்கள் அறிவித்த கோட்பாட்டுக்கு முரணாக இன்றைக்கு அந்த கட்சிகள் செயற்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றார்.




















