LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னை – புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை: 3 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Share

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. ‘டிட்வா’ புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இன்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் பாலாஜி அவென்யூ என்ற இடம் அருகே உள்ள ஆர்.சி. கட்டிடத்தின் பின்புறம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.

புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி பாலாஜிநகர், குமரன்நகர், சன்சிட்டி நகர், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மல்லிமா நகர், நியூ ஸ்டார்சிட்டி, மற்றும் பாலாஜி கார்டன், தணிகைநகர், வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் ஏராளமானோர் தவித்து வருகிறார்கள். 2 நாட்களாகவே இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றனர். பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த சூழலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மணி கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெற்று உள்ளன. கடந்த ஆண்டுகளில் பெரிய மழை பெய்ததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்.  எனவே கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த அக்டோபர் மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் தற்காலிகமாக கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் இந்த பகுதியை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாம்பரம் அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் ஜெகதீசன்நகர், செல்வராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக திருமழிசை அருகே உள்ள மேப்பூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 600 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகரில் 10 தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.