LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி பேசியது? பரபரப்பு தகவல்கள்

Share

எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்த பின் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

     அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இதற்கிடையே, அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், “அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியதுடன் 10 நாள் கெடுவும் விதித்தார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய கே.ஏ.செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதற்கிடையே, கே.ஏ.செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நேற்று முடிவடைந்த நிலையில், திடீரென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம், டெல்லி வருகைக்கான காரணம் குறித்து கேட்டபோது, பதற்றத்துடனேயே காணப்பட்டார். சரியாக பதில் கூறாமல் சென்றுவிட்டார். இந்த நிலையில், புதிதாக துணை அதிபராக பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இரவு விருந்தும் அமித்ஷாவின் இல்லத்திலேயே பரிமாறப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்தும், அமித்ஷாவை சந்தித்தது குறித்தும், அதுவும் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது, முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்றும் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், மனம் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்த புகைப்படங்களை இன்று காலை வெளியிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து இருந்தார். ஆனாலும், அவர் அமித்ஷாவிடம் பேசியது குறித்த உண்மைத்தகவல் வெளிவராமலேயே இருந்தது. தற்போது அந்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தமிழக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்குகளை தேர்தலுக்கு முன்னால் விரைவாக விசாரிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டு கார் இறக்குமதி செய்த வழக்கு, டாஸ்மாக் முறைகேடு வழக்கு, மணல் முறைகேடு வழக்குகளையும் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.