LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘தமிழர’சைப் பாதுகாக்கும் குறு நில மன்னர்கள்

Share

”குறு நில மன்னர்கள் தமது நிலத்தில் தமிழரசுக்கு விசுவாசமாக போரிட்டு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து துரோகிகள்,எதிரிகளை கிட்டவும் நெருங்க விடாது மகாராஜா, மாமன்னரின் மானம் காத்து தனி ஆட்சியமைத்த நிலையில்,மகாராஜாவினதும் மாமன்னரினதும் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களில்ஆட்சியமைக்க மகாராஜாவும் மாமன்னரும் துரோகிகள்,எதிரிகளின காலடியில் மண்டியிட்டமையும் முக்கிய சபைகளை பறிகொடுத்தமையும் மாமன்னர் தனது தொகுதி ஆட்சிகளைக்கூட பறி கொடுத்தமையும்தான் தமிழரசுக்கு பெரும் இழுக்கையும் இழிநிலையையும் ஏற்படுத்தியுள்ளது”

கே.பாலா

சி.வி.கே. சிவஞானத்தை மகாராஜாவாகவும் எம்.ஏ. சுமந்திரனை மாமன்னனாகவும் கொண்ட ”தமிழரசு”ஆட்சியில் (கட்சியில்) சில குறுநில மன்னர்கள் மகாராஜாவுக்கோ மாமன்னருக்கோ கட்டுப்படாது தனித்து செயற்படுவதாகவும் இதனால் தமிழரசு ஆட்சியின் கட்டுக்கோப்பு பாதிக்கப்படுவதாகவும் ஆட்சி அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் இதனால் தமிழரசு ஆட்சியின் மாண்புக்கு பங்கம் ஏற்படுவதாகவும் எனவே குறு நில மன்னர்களை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் குறு நில ஆட்சி அதிகாரத்தை பறிக்க வேண்டுமென மகாராஜாவுக்கும் மாமன்னருக்கும் சாமரம் வீசும் சில தற்பெருமை விற்பன்னர்கள் தினமும் ஓதிக்கொண்டிருக்கின்றனர்.

அதாவது மகாராஜாவும் மாமன்னரும் தமிழரசு ஆட்சியை வடக்கு கிழக்கு மாகாணங்களில் விஸ்தரித்துவரும் நிலையில் இந்த தமிழரசின் குறுநில மன்னர்களின் இவ்வாறான மகாராஜா, மாமன்னருக்கு கட்டுப்படாத போக்கினால் தமிழரசு ஆட்சியை விஸ்தரிக்கும் போரில் மகாராஜாவுக்கு மாமன்னருக்கும் சில இடங்களில் தோல்விகளை சந்திக்க வேண்டிய கள நிலைமைகள் ஏற்பட்டதாகக்கூறி இந்த சாமரம் வீசும் தற்பெருமை விற்பன்னர்கள் அந்த குறுநில மன்னர்களுக்கு எதிராக மகாராஜாவையும் மாமன்னரையும் உசுப்பேத்தி குறுநில ஆட்சியை அவர்களிடமிருந்து பறிக்குமாறும் தமிழரசின் ஆட்சியிலிருந்து விலக்கி வைக்குமாறும் தூண்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் இந்த சாமரம் வீசும் தற்பெருமை விற்பன்னர்கள் கூறுவது போல் தமிழரசின் குறு நில மன்னர்களினால் மகாராஜாவினதும் மாமன்னரினதும் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து, பாதிப்பு, இழுக்கு ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கு ஆட்சிப் போரில் இந்த மகாராஜாவினதும் மாமன்னரினதும் ஆடை களையாது மானத்தை காத்தவர்களாகவும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பறிபோகவிருந்த தமிழரசின் ஆட்சியை பாதுகாத்தவர்களாகவும் தனித்து நின்று போராடி தமிழரசுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்களாகவும் இந்த குறு நில மன்னர்களே உள்ளதைக்காண முடிகின்றது.

இந்த தமிழரசின் மகாராஜாவுக்கும் மாமன்னருக்கும் சாமரம் வீசும் இந்த தற்பெருமை விற்பன்னர்கள் தமிழரசின் வடக்கு ஆட்சியின் கிளிநொச்சி மாவட்ட குறு நில மன்னராக சிறீதரனையும் முல்லைத்தீவு மாவட்ட குறுநில மன்னராக ரவிகரனையும் மன்னார் மாவட்ட குறுநில மன்னராக சார்ள்ஸ் நிர்மலநாதனையும் குறிப்பிடுக்கின்றனர் யாழ்ப்பாண மாவட்டம் மாமன்னர் சுமந்திரனின் நேரடி ஆட்சியில்,கட்டுப்பாட்டில் உள்ளது. வவுனியா மாவட்டம் மாமன்னரின் விசுவாசி சத்தியலிங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் தலைமைக்கு கட்டுப்படாத குறுநில மன்னராக திருகோணமலை மாவட்டத்தின் குகதாசனையும் குறிப்பிடுகின்றனர் .இவ்வாறான நிலையில் இந்தக் குறுநில மன்னர்களினால் தமிழரசின் உள்ளூராட்சிப்போர் வெற்றி பாதிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் அவர்கள் தமது குறி நிலங்களுக்கான போரில் பெரு வெற்றிபெற்றுள்ள நிலையில் மகாராஜா சிவஞானமும் மாமன்னர் சுமந்திரனும் அவர்களின் விசுவாசியான சத்தியலிங்கமும் தான் தமது நிலத்துக்கான போரில் மண் கவ்வியுள்ளனர். ஆட்சிகளைப் பறி கொடுத்துள்ளனர். தமிழரசுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளனர்.

குறு நில மன்னரான சிறீதரனின் ஆட்சியிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் அவரின் தலைமையிலான படையணி எவரினதும் துணையின்றி தனித்து வெற்றி கொண்டு தமிழரசின் தனி ஆட்சியை ஏற்படுத்தி தமிழரசின் மானம் காத்துள்ளது. குறு நில மன்னரான ரவிகரனின் ஆட்சியிலிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் அவரின் தலைமையிலான படையணி எவரினதும் துணையின்றி தனித்து வெற்றி கொண்டு தமிழரசின் தனி ஆட்சியை நிறுவியுள்ளது. இவ்வாறு தமிழரசுக்கு தனிப்பெரும் வெற்றியை ரவிகரன் பெற்றுக்கொடுத்தாலும் மாமன்னரின் குடைச்சலாலும் கள நிலைவரம் தெரியாத தலையீடுகளினாலும் குறுநில ஆட்சிப்பொறுப்பிலிருந்து ரவிகரன் தானாகவே விலகியுள்ளார்.

குறு நில மன்னரான குகதாசனின் ஆட்சியிலுள்ள மூவினங்களையும் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை என முக்கிய ஆட்சி அதிகாரங்களை தமிழரசு கைப்பற்றியது.அதேநேரம் மன்னார் மாவட்ட குறுநில மன்னரான சாள்ஸ் நிர்மலநாதனுடன் தமிழரசின் மகாராஜாவும் மாமன்னரும் மோதல்போக்கை கடைப்பிடித்ததால், குறுநில மன்னரின் கோரிக்கைகளை ஏற்காததால் ,அங்குள்ள கள நிலைவரம் தெரியாமல் தாம் நினைத்ததையே செய்ய வேண்டுமென அவரை வற்புறுத்தியதால் மன்னார் மாவட்டத்தின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசு பறிகொடுத்தது.முதலில் வெற்றிபெற்ற சபைகளைக்கூட மாமன்னரின் பிடிவாதத்தாலும் தலைக்கனத்தாலும் இறுதிப்போரில் தமிழரசு பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இவ்வாறு குறு நில மன்னர்கள் தமது அரசுக்கு விசுவாசமாக வெற்றிகளைப்பெற்றுக்கொடுத்து துரோகிகள் எதிரிகளை கிட்டவும் நெருங்க விடாது தமிழரசின் மானம் காத்த நிலையில், மகாராஜாவினதும் மாமன்னரினதும் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலுமுள்ள யாழ் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைகளுக்கான ஆட்சியமைப்பில் மகாராஜாவும் மாமன்னரும் துரோகிகளினதும் எதிரிகளினதும் காலடியில் மண்டியிட்டமையும் முக்கிய சபைகளை பறிகொடுத்தமையும் தான் தமிழரசுக்கு பெரும் இழுக்கையும் இழிநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் தமிழரசின் தலைநகரான யாழ் நகரின் ஆட்சியைக்கூட துரோகிகளினதும் எதிரிகளினதும் காலடியில் மண்டியிட்டு ஆதரவு பெற்றே கைப்பற்றவேண்டிய நிலையிலேயே மகாராஜாவினதும் மாமன்னரினதும் ஆட்சி பலவீனமான நிலையில் இருந்தது.சில இடங்களில் மாமன்னர் சகுனி வேலைகளில் ஈடுபட்டும் ஆட்சியை பின் கதவால் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமன்றி மாமன்னரால் தான் பிறந்த வடமராட்சி மண்ணின் பருத்தித்துறை ,வல்வெட்டித்துறை நகரசபைகளைக் கூட கைப்பற்ற முடியவில்லை. அங்குள்ள பிரதேச சபைகளில் கூட துரோகிகள்,எதிரிகளோடு சேர்ந்தே ஆட்சியமைத்துள்ளார்.மாமன்னரின் தொகுதி மக்கள் கூட அவரின் பேச்சைக்கேட்க தயாரில்லாத நிலையே அங்குள்ளது. மாமன்னரின் விசுவாசியான சத்தியலிங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா மாவட்டத்திலும் தமிழரசு ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையிலேயே வடக்கு,கிழக்கு முழுவதும் தனது பேச்சைக்கேட்க வேண்டும்,குறுநில மன்னர்கள் நான் கிழிக்கும் கோட்டைதாண்டக்கூடாது என மாமன்னர் எதிர்பார்க்கின்றார்.

இவ்வாறான நிலையில்தான் தமிழரசு 58 சபைகளில் போரிட்டது , 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போரிட்டோம் . அப்படிப் போரிட்டுப் பிரதிநிதித்துவத்தையும் பெற்றும் கொண்டோம்.மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம். மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றோம். இது தமிழரசுக்கு கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் எமக்குக் கொடுத்திருக்கும் ஆணையாக நாம் ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்குச் சேவையாற்றுவோம் என மாமன்னர் கூறியுள்ளார்.

தமிழ் அரசு போரிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும். யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம் என மாமன்னர் தேர்தல் போருக்கு முன்னர் சூளுரைத்திருந்தார் ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது .அதுவும் துரோகிகள் ,எதிரிகளோடு சேர்ந்தே கைப்பற்றினார். ஒரு குறித்த சபையில் தமிழரசுக்கு கூடுதலான மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுகின்றபோது அந்த மக்கள் தீர்ப்பை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டியது ஏனைய கட்சிகளின் ஜனநாயகக் கடமை என மாமன்னர் உபதேசம் செய்தார். ஆனால் அவரே ஏனைய தமிழ் தேசிய கட்சியொன்று பெரும்பான்மை பெற்ற சபையில் சட்டச் சகுனித்தனம் செய்து மக்களின் தீர்ப்பை புறக்கணித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

ஆகவே ”அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்” எனக் காத்திருந்து பதில் தலைவரான மகாராஜாவும் தமிழரசின் தலைவராக போட்டியிட்டும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டும் இரண்டிலுமே தோல்வியடைந்த நிலையில் உள்வீட்டு சதிகளினால் பதில் பொது செயலாளரான மாமன்னரும் தமது நேரடி கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் துரோகிகள் ,எதிரிகளோடு சேர்ந்தும் சகுனித்தனங்கள் செய்தும் சில வெற்றிகளைபெற்றுக்கொண்டு, உணர்வோடும் நேர்மையோடும் வீரத்தோடும் போரிட்டு தமிழரசாக ஆட்சிகளைக் கைப்பற்றி தமிழரசுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ,வெற்றிபெற்றுக்கொடுத்த, துரோகிகள் ,எதிரிகளிடமிருந்து தமிழரசை பாதுகாத்த குறுநில மன்னர்களை எதிரிகளாக்க, துரோகிகளாக்க முயன்றால் மகாராஜாவும் மாமன்னரும் அவர்களின் தமிழரசும் காணாமல்போனோரின் பட்டியலிலேயே சேரும் என்பதனை மறந்து விடக்கூடாது.